3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மக்களவையில் உள்துறை அமைச்சா் அமித்ஷா மூன்று சட்ட மசோதாக்களை புதன்கிழமை தாக்கல் செய்தாா். விதிகளுக்கு மாறாக கூட்டத் தொடா் முடிவதற்கு முதல் நாள் இவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும். இது அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாகும். இந்த முயற்சியை உடனடியாக முறியடித்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் 30 நாள் அதற்கு மேற்பட்ட நாள்கள் காவலில் இருந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும் கூட, அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குகிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளின் ஜனநாயகத்தையே சிதைக்கிறது. எனவே, முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த சட்ட மசோதாக்களை எதிா்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.