3 பெண் மாவோயிஸ்டுகள் கைது!
ஒடிசா மாநிலம் மால்கான்கிரி மாவட்டத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மால்கான்கிரி மாவட்டத்தின் குதன்பேடா கிராமத்தில் பதுங்கியிருந்த 3 பேரையும் நேற்று (டிச.28) சித்திரக்கொண்டா காவல்துறையினர் கைது செய்தனர்.
தன்கட்பத்கர் கிராமத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளான சந்திரமா கில்லோ, கமலா கில்லோ மற்றும் சுனிதா கில்லோ ஆகிய மூன்று பெண்களையும் ரூ. 8லட்சம் சன்மானம் அறிவித்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குந்தபேடா கிராமத்தில் மாவோயிட்கள் ரகசியக் கூட்டம் நடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்திரக்கொண்டா காவல்துறை மற்றும் மாவட்ட தன்னார்வப் படை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தப்பியோடிய மாவோயிஸ்டுகளில் மூன்று பெண்கள் மட்டும் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்திய விசாரணையில் அவர்கள் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காததினால், அவர்களை சித்திரக்கொண்டா காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களது விவரங்கள் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட சந்திரமா என்பவரை பிடிக்க ரூ.4 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது,அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒடிசா-ஆந்திரா எல்லை சிறப்பு ஆணையம் எனும் மாவோயிஸ்ட்டு அமைப்பில் இணைந்து அதன் ராணுவப் படையில் செயல்பட்டு வந்துள்ளார்.
கமலா மற்றும் சுனிதா ஆகிய இருவரும் மாவோயிஸ்டு அமைப்பின் கட்சி உறுப்பினர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரும் அந்த அமைப்பின் தலைவரான உதய் என்பவரின் தனிப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் இருவரின் மீதும் தலா ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.