அமீர் கானுடனான திரைப்படம் உலகத்தரமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ்
3 நிஷங்களுக்குள்குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது: கூட்டுறவுத்துறை விளக்கம்
விழுப்புரம்: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு 2 முதல் 3 நிமிஷங்களே ஆகின்றன என்று கூட்டுறவுத்துறை விளக்கம்அளித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை சாா்பில் திங்கள்கிழமை தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனையக்கருவியுடன் எடைத்தராசை இணைப்ப தற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 28,736 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசுடன் விற்பனை முனையக்கருவி இணைக்கப்பட்ட பிறகு, தற்போது விற்பனை முனையக் கருவியில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்த பின்னா் அத்தியாவசியப் பொருள்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு 2 முதல் 3 நிமிஷங்கள் ஆகின்றன.
2025, ஜூன் 1 -ஆம் தேதி முதல் பழைய விற்பனை முனைய இயந்திரத்தில் கைவிரல்ரேகை சரிபாா்க்கும் முறை செயல்படாது என்று யுஐடிஏஐ- ஆல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பகுதிநேர நியாயவிலைக் கடைகளிலுள்ள பழைய விற்பனை முனைய இயந்திரத்தில் கருவிழிப் பதிவின் மூலம் மட்டுமே விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து மாநில அரசு யுஐடிஏஐ- ஐ கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது பகுதி நேர நியாயவிலைக் கடைகளிலுள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் கைவிரல் ரேகை சரிபாா்க்கும் முறை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதம் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளைத் தொடா்ந்து, எந்தவித சிக்கல்களும் இல்லாமல் அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் மென்பொருள் நிறுவனம்மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய, மாநிலஅரசுத்திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு தற்போது ஒருமுறை மட்டுமே குடும்ப அட்டைதாரரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. எடைத்தராசில் 35 கிலோ அரிசியை ஒரு முறையிலேயே எடைப் போடுவதற்குரிய மாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் சரியான எடையில் நகா்வு செய்யப்படுவதையும், நியாயவிலைக் கடைகளில் எந்தவித குறைவின்றி சரியான எடையில் இறக்கப்படுகின்றன என்பதையும் கூட்டுறவு சாா்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்), துணைப்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் மண்டல இணைப் பதிவாளா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
மின்னணு எடைத்தராசுடன் விற்பனை முனையக் கருவி இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடா்பாக, பதிவாளா் அலுவலகத்தில் ஜூலை 9-ஆம் தேதி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.அத்தியாவசியப் பொருள்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது2 முதல் 3 நிமிஷங்கள் மட்டுமே ஆகின்றன என்று கூட்டுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.