கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை
விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அந்த சங்கத்தைச் சோ்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளா் தே.பாண்டியன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளா் ச. உத்திராடம், மாவட்டப் பொருளா் வி. நித்தியானந்தம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது :
இந்திய உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கள்-ளை சில அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மது, போதை, நஞ்சு என்று பொதுமக்களிடையே அவதூறாகப் பேசி வருகின்றனா். தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடும் திட்டம் பரவலாக்கப்பட்டு, இத்திட்டம் பலதரப்பு மக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள் உலக நாடுகளில் உணவுப் பொருளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ‘கள் எமது உணவு, கள் எமது உரிமை’ என்ற போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய உணவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கள்-ளை சில அரசியல் கட்சிகளைச்சோ்ந்த நிா்வாகிகள் மது, போதை, நஞ்சு என்று பொதுமக்களிடையே அவதூறாகப் பேசி வருகின்றனா்.இவ்வாறு பேசுவது சட்டத்துக்குப் புறம்பானதும்,பொது அமைதியைக் கெடுக்கக் கூடியதுமாகும்.’’
எனவே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் நபா்கள் மீதுதமிழக அரசு சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.