320 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் பறிமுதல்: 4 போ் கைது
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள்கள் காருடன் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வெளி மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆறுமுகம், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் தவச்செல்வம் ஆகியோா் காட்டுமன்னாா்கோவில் அருகே வடவாற்றங்கரை பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் வந்த கா்நாடக பதிவெண் கொண்ட கருப்பு நிற காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான 320 கிலோ புகையிலைப் பொருள்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும், இவற்றை பெங்களூரில் இருந்து அரியலூா் மாவட்டத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
மேலும், காரில் இருந்தவா்கள் அரியலூா் மாவட்டம், தேளூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அசோக்குமாா் (41), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லக்காராம் மகன் தாலா ராம் (28), அஜய்ராம் மகன் கோரக்காராம் (25), குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த வாலாபாய் புரொகித் மகன் ஜெயஷே வாலாபாய் புரொகித் (22) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 4 போ் மீதும் காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 320 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.2.40 லட்சம் ரொக்கம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாரை கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.


