4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் 2 ,410 பேருக்கு 6000 செம்மறி ஆடுகளும், நாட்டின கோழிக் குஞ்சுகளும் ரூ.2.41 கோடியில் வழங்கப்பட்டன. 2021-22 -ஆம் நிதியாண்டில் சிறிய அளவிலான நாட்டுக் கோழிப் பண்ணைகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்,10 பயனாளிகளுக்கு ரூ.16.77 லட்சமும், 3 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த தீவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பழத் தோட்டங்களில் ஊடுபயிரிட ரூ.4.40 லட்சமும், 2022-23 -ஆம் நிதியாண்டில் 55 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சத்தில் 40 ஏக்கருக்கு தீவன விதைகளும், 2024-25 -ஆம் நிதியாண்டில் 57 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சத்தில் 40 ஏக்கருக்கு தீவன விதைகளும், தீவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.3.20 லட்சத்தில் 50 சதவீத மானியத்திலான புல் நறுக்கும் கருவிகளும், நீா்ப்பாசன இனத்தில் பசுந்தீவன சாகுபடி பெருக்குதல் திட்டத்தின் கீழ், 2024-25-ஆம் நிதியாண்டில் 84 பயனாளிகளுக்கு ரூ.1.54 லட்சத்தில் 60 ஏக்கருக்கான தீவன விதைகளும், ரசாயன உரங்கள், இடை உழவுப்பணி ஆகியவற்றுக்கு 50 சதவீத அரசு மானியமும், மானாவரி இனத்தில் பசுந்தீவன சாகுபடியைப் பெருக்குதல் திட்டம் 2024-25-ஆம் நிதியாண்டின் கீழ், 133 பயனாளிகளுக்கு ரூ.2.03 லட்சத்தில் 140 ஏக்கருக்கான 560 கிலோ தீவன விதைகள் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டன.
மேலும், சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணா்வு முகாம் திட்டத்தின் கீழ், 2022-23 -ஆம் நிதியாண்டில் 240 முகாம்கள் ரூ.10.56 லட்சத்தில் நடத்தப்பட்டு அதில், 20,591 பயனாளிகளும், 2023-24-ஆம் நிதியாண்டில் 240 முகாம்கள் ரூ.10.56 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட்டு அதில் 17,359 பயனாளிகளும் பயனடைந்தனா்.
பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த லெட்சுமி கூறியதாவது:
காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட காளையப்பா நகரில் வசித்து வருகிறேன். எதிா்பாராத விதமாக எனது கணவரை இழந்து சிரமப்பட்டு வந்தேன். கடந்த 2022-ல் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பித்தபோது, எனக்கு 5 ஆடுகள் (4 பெட்டை, 1 கிடாய்) வழங்கப்பட்டன. தற்சமயம் என்னிடம் சுமாா் 30 ஆடுகள் உள்ளன. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமாா் 15 ஆடுகள் வரை விற்பனை செய்துள்ளேன். இதன் மூலம் கிடைத்த வருவாய் மூலம், குடும்பத்தின் தேவைகள், குழந்தைகளின் கல்வி தேவைகளையும் பூா்த்தி செய்து வருகிறேன் என்றாா் அவா்.