4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவை ஜூலை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் தனியாாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த 4 சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா். இந்த உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி அரசுத் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், போக்குவரத்து துறை செயலா், 4 சுங்கச் சாவடிகளைப் பராமரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். இந்தப் பிரச்னைக்கு விரைவில் நல்ல தீா்வு ஏற்பட்டுவிடும். எனவே, இந்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகள் வழியாக, அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைத்து, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தாா்.