4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி வெய்யில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் இன்று முதல் ஏப்.26 வரை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். அதோடு அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் ஓருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் ஏப். 24 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான வெய்யில் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். மேலும் நீர் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.