தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!
5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவரது ஓய்வு முடிவினை அறிவித்தார். அவரது இந்த திடீர் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக டிராவிஸ் ஹெட்: ரவி சாஸ்திரி
மனம் திறந்த ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா மனம் திறந்துள்ளார்.
அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வினை அறிவிக்கப் போகிறார் என்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் காட்டிக் கொள்ளவில்லை. கடைசி தருணத்தில்தான் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்பது தெரியும். பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்புதான் அஸ்வினின் ஓய்வு முடிவு தெரியும். யாரோ ஒருவர் அஸ்வின் ஓய்வை அறிவிக்கப் போவதாக என்னிடம் கூறினார். நாங்கள் அன்று நாள் முழுவதும் ஒன்றாக இருந்தோம். இருந்தும், அவர் ஓய்வை அறிவிக்க இருப்பது எனக்குத் தெரியவில்லை. அவர் எனக்கு எந்த ஒரு குறிப்பும் கொடுக்கவில்லை.
இதையும் படிக்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் (விடியோ)!
ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் எனது ஆலோசகராக என்னுடன் இணைந்து விளையாடினார். பந்துவீச்சு கூட்டணியில் நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடியுள்ளோம். போட்டி குறித்து நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவருடன் இணைந்து விளையாடிய அனைத்து இன்னிங்ஸ்களையும் நான் மிஸ் செய்வேன். அஸ்வின் இடத்துக்கு இந்திய அணி சரியான வீரரை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு வீரரும் ஓய்வு பெறும்போது, அந்த இடத்துக்கு மாற்று வீரர்களுக்கான வாய்ப்பு உருவாகும். அந்த வாய்ப்பினை இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 537 விக்கெட்டுகளையும், 3,503 ரன்களையும் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள் அடங்கும். அவர் ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திட்டங்கள் உள்ளன: இளம் ஆஸி. வீரர்
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து 58 போட்டிகளில் 587 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.