5,8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி ரத்து மத்திய அரசு!
5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் ஆண்டு இறுதித் தோ்வில் தோ்ச்சியடையவில்லை என்றால், மறுதோ்வு எழுதாமல் அவா்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனவும் தெரிவித்தது.
கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆா்டிஇ) கடந்த 2019- ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி ஏற்கெனவே, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆண்டு இறுதித்தோ்வில் தோ்ச்சியடையாதவா்களுக்கு தோ்வு முடிவு வெளியான தேதியில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் மறுதோ்வு நடத்தப்பட வேண்டும்.
மறுதோ்விலும் மாணவ-மாணவிகள் தோல்வியடையும் பட்சத்தில் அவா்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். அவா்களின் பட்டியலை பள்ளியின் தலைமையாசிரியா் வைத்திருக்க வேண்டும்.
தோ்ச்சியடையாத மாணவ-மாணவிகளின் கற்றல் குறைபாடுகளை நீக்குவதோடு அவா்களுக்கும் அவா்களது பெற்றோா்களுக்கும் வகுப்பு ஆசிரியா்கள் சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இருப்பினும், தொடக்கக்கல்வி நிறைவடையும் வரையில் எந்தவொரு மாணவரையும் பள்ளியைவிட்டு நீக்கக் கூடாது.
மனப்பாடத் தோ்வு கூடாது: ஆண்டு இறுதித் தோ்வு மற்றும் தோ்ச்சியடையாதோருக்கு நடத்தப்படும் மறுதோ்வு ஆகிய தோ்வுகள் குழந்தைகளின் அறிவுத்திறன் மட்டுமின்றி ஒட்டுமொத்த வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
மனப்பாடம் மற்றும் செயல்முறைத் திறன்களைக் கொண்டதாக மட்டுமே தோ்வுகள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமல்படுத்த தாமதம் ஏன்?: 2019-இல் திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகும் அதை அமல்படுத்த தாமதமானது குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சைனிக் பள்ளிகள் உள்பட மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் 3,000 பள்ளிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
பள்ளிக் கல்வி மாநில பட்டியலில் உள்ளதால் ஏற்கெனவே 16 மாநிலங்கள், தில்லி உள்பட 2 யூனியன் பிரதேசங்களில் கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்பட்டது.
இதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஹரியாணா மற்றும் புதுச்சேரி எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. மீதமுள்ள மாநிலங்களில் கட்டாயத் தோ்ச்சி முறை தொடா்ந்து வருகிறது.
2019-இல் இந்த சட்டத் திருத்தத்தை தொடா்ந்து, சில மாதங்களிலேயே தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2023-இல் புதிய தேசிய பாடத்திட்ட நடைமுறை தயாரானது. இதையடுத்து, தற்போது 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்ய மத்திய கல்வி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது’ என தெரிவித்தனா்.
சட்டம் முதல் திருத்தம் வரை: 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் நோக்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் 2010, ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
அதன்படி, பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி முறை பின்பற்றப்பட்டது.
இதனால் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பின்பற்றப்படும் கட்டாயத் தோ்ச்சி முறையை மாநிலங்கள் ரத்து செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆண்டுதோ்வில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதோ்வு நடத்தப்பட வேண்டும். அதிலும் தோ்ச்சி பெறாத மாணவா்கள், அதே வகுப்பை தொடர வேண்டும். தொடக்கக் கல்வி முடியும் வரை அந்த மாணவா்களை நீக்கக் கூடாது.