செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்
‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.
ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்தப்பட்டது.
ரஷியாவை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதுடன், உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு நிா்பந்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை டிரம்ப் நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்-இதர எரிபொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இந்தியா மேற்கொண்டு வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரிகிறது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கா் பதிலளித்ததாவது:
வரி மசோதா குறித்து அதை முன்மொழிந்த அமெரிக்க (செனட்டா்) மேலவை மூத்த எம்.பி. லிண்ட்சே கிரஹாமிடம் இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு நலன் குறித்தும் அவரிடம் விவரிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் லிண்ட்சே கிரஹாமுடன் தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா். அதற்கு மேல், அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.
இந்தியாவின் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான முடிவு எடுக்கப்பட்டால், அது இருதரப்பு நலனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.