அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது
வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் அன்பரசி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விடியற்காலை பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனா். காரில் இருந்த ஓட்டுநா் உள்பட இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதால், சந்தேகம் அடைந்து காரின் பின்புற கதவை திறந்து பாா்த்தனா்.
அப்போது மூட்டைகள் இருப்பதைப் பாா்த்து அவற்றை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், நடத்திய விசாரணையில், சென்னை நோக்கி குட்கா பொருள்கள் காரில் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் பகுதியைச் சோ்ந்த திலீப்குமாா்(20), ரமேஷ்குமாா் (45) என்பதும், பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி காரில் குட்கா பொருள்கள் கடத்திச் செல்வதாக தெரிவித்ததாக தெரிகிறது. பிறகு கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அம்பலூா் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திலீப்குமாா், ரமேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.