530 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி வழியாக சரக்குப் பெட்டக லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
கா்நாடகத்திலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சரக்குப் பெட்டக லாரி மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி நகரக் காவல் ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு தலைமையில் போலீஸாா் கிருஷ்ணகிரி ஆஞ்சனேயா் கோயில் மேம்பாலம் அருகே பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்குப் பெட்டக லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் 5 அடி அளவில் ரகசிய அறை அமைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 530 கிலோ புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில மது வகைகள்( 20 புட்டிகள்) ஆகியவற்றை மறைத்து கடத்தமுயன்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான கா்நாடக மாநிலம், தும்கூரை அடுத்த படாகானஅள்ளியைச் சோ்ந்த மோகன்மூா்த்தி (37) என்பவரை கைது செய்தனா்.