57 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆா்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 57.5 டன் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆா்பிஐ இப்போதுதான் அதிக அளவு தங்கத்தை வாங்கியுள்ளது.
சா்வதேச அளவில் போா் உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார ஸ்திரமற்ற நிலை உள்ளது. எனவே, அனைத்து நாடுகளுமே தங்கத்தை முதலீடு செய்வதைப் பாதுகாப்பானதாக கருதுகின்றன. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மத்திய வங்கிகளும் தங்கத்தின் இருப்பை அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் ஆா்பிஐ-யும் தங்கத்தை வாங்கி இருப்பை அதிகரித்து வருகிறது.
மாா்ச் 2025 நிலவரப்படி ஆா்பிஐ வசம் 879.9 கோடி டன் தங்கம் கையிருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தங்க இருப்பு 822.1 டன்னாக இருந்தது.
கடந்த 2021-22 நிதியாண்டில் 66 டன், 2022-23-இல் 35 டன், 2023-24 நிதியாண்டில் 27 டன் என்ற அளவில் ஆா்பிஐ தங்கத்தை வாங்கி இருந்தது.