57 முறை பணியிடமாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா இன்றுடன் ஓய்வு!
34 ஆண்டுகள் பணிக் காலத்தில் 57 முறை பணியிட மாறுதலுக்கு உள்ளான ஹரியாணா மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடாத 1991ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா, தற்போது போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெறுகிறார்.
யார் இந்த அசோக் கெம்கா?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1965 ஆம் ஆண்டு பிறந்த அசோக் கெம்கா, கரக்பூர் ஐஐடியில் பி.டெக். பட்டப்படிப்பும், டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். வணிக நிர்வாகம் மற்றும் நிதித்துறையில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பும் முடித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு ஹரியாணா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை பயின்றுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்புடைய குருகிராம் நில ஒப்பந்த ஊழலைக் கண்டறிந்து, அதன் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
‘நேரான மரங்களே வெட்டப்படுகின்றன’
ஊழலுக்கு எதிரான அசோக் கெம்காவின் தொடர் நடவடிக்கை காரணமாக 34 ஆண்டு பணிக் காலத்தில் 57 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை நான்கு முறை ஆவணக் காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில், மூன்று முறை பாஜக ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.
இறுதியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டருக்கு அசோக் கெம்கா எழுதிய கடிதத்தில், “ஊழல் தடுப்புப் பிரிவில் தனக்கு பொறுப்பு வழங்கினால், ஊழலுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் அடிக்கடி பணியிடமாறுதல் செய்யப்பட்டதால், அவரது நண்பர்களுக்கு கிடைத்த பதவி உயர்வுகள் கெம்காவுக்கு கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக பதிவிட்டிருந்த கெம்கா, ”நேரான மரங்கள் எப்போதும் முதலில் வெட்டப்படுகின்றன. எந்த வருத்தமும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பணிக்காலத்தில் சராசரியாக சுமார் 6 மாதத்துக்கு ஒருமுறை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர்தான், இந்தியாவிலேயே அதிக பணியிட மாறுதலுக்குள்ளான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கக்கூடும் என்பது நிச்சயம் இவரது நேர்மைக்கான சான்றாகவே மாறிவிட்டது, மக்களால் அப்படித்தான் பார்க்கவும்படுகிறது. பலரால் பிழைக்கத் தெரியாதவர் என்று அழைக்கப்பட்டாலும், இவரது நேர்மையான பணி பலருக்குத் தேவைப்படாததாக இருந்தாலும், நிச்சயம் நேர்மையான அதிகாரி என்று சொன்னதும் இவரது பெயர் பல இளைஞர்களுக்கும் நினைவுக்கு வரும்.
இன்றுடன் (ஏப். 30) அசோக் கெம்கா பணி ஓய்வுபெறுகிறார். அவருடன் அவரது பணியிட மாற்றமும் ஓய்வுபெறுகிறது.