பாக். முன்னாள் வீரர் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் முடக்கம்!
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வருவதாகக் கூறி முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இந்தியர்கள் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்ததற்காக அஃப்ரிடியின் யூடியூப் சேனலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்காக 500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அஃப்ரிடி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்கவில்லை என்று வெறுப்புடன் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான சோயிப் அக்தர், ரஷீத் லத்தீப், பாசித் அலி, வாசே ஹபிப், ரிஸ்வான் ஹைதர், மோஷின் அலி, முனீப் ஃபாரூக், உஸைர் கிரிக்கெட் ஆகியோரின் யூடியூப் சேனல்களையும் இந்திய அரசு தடை செய்துள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!