ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!
`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!
இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடு பாதியாகக் குறைவதாகவும் தெரிவித்துள்ளது.
நவீன வாழ்வியல் முறைகளில் தூக்கமின்மை முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை முன்வைக்கிறது இந்தக் கணக்கெடுப்பு.
2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்குகின்றனர்
லோக்கல் சர்கிள் என்ற அமைப்பு தூக்கம் தொடர்பாக 40,000 நபர்களைக் கணக்கெடுப்பு செய்துள்ளது. இதில் 61% ஆண்கள், 39% பெண்கள்.
இந்த அறிக்கையில், 39% பேர்தான் நிம்மதியாக 6-8 மணிநேரம் உறங்குவதாகவும் 39% பேர் 4-6 மணி நேரம்தான் உறங்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்கும் நிலையில், 20% மக்கள் 4 மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர்.
பெண்கள் வீட்டு வேலைகளால் தூங்க முடியவில்லை
கணக்கெடுக்கப்பட்டதில் 59% பேர் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தைப் பெறுகின்றனர்.
வருகின்ற மார்ச் 14ம் தேதி உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் 348 மாவட்டங்களில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 72% பேர் தூக்கத்தின் நடுவில் கழிப்பறை பயன்படுத்த வேண்டியிருப்பது சரியாகத் தூங்க முடியாததற்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளனர்.
25% பேர் அதிகாலையில் வேலை இருப்பதனால் சரியாகத் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். குறிப்பாகப் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டியிருப்பதனால் சரியாகத் தூங்க முடியவில்லை என்ற காரணத்தைக் கூறியுள்ளனர்.
22% பேர் கொசுக்கள் மற்றும் வெளிப்புற சத்தங்களால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 9% பேர் பெற்றோர், குழந்தைகள் அல்லது குடும்பத்தினரால் ஏற்படும் தொந்தரவு காரணமாகத் தூங்க முடியவில்லை என்றும், மற்றொரு 9% பேர் தூக்கத்தில் மூச்சுக்கோளாறு போன்ற மருத்துவ பிரச்னைகளால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர்.
6% பேர் மொபைல் பயன்பாட்டால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர்.
தூக்கமின்மையின் பாதிப்புகள்:
இரவில் சரியாகத் தூங்க முடியாததை ஈடுசெய்ய வேலை நேரத்தில் பவர் நாப் செய்வது, மதிய உணவுக்குப் பிறகு தூங்குவது, வார இறுதியில் தாமதமாக எழுவது போன்ற பழக்கங்களைக் கொண்டுள்ளனர். அதிலும் 38% பேர் இப்படி வார இறுதிகளில் கூட ஈடு செய்ய முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தூக்கமின்மை (Insomnia) இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறு, பக்கவாதம் வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற பிரச்னைகளை இது ஏற்படுத்தும் என்பதனால் இது நிச்சயம் நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று.
லோக்கல் சர்கிள் நிறுவனர் சச்சின் தபாரியா, "பெரும்பாலான இந்தியர்கள் அதிக வேலை நேரம், பயண நேரம் காரணமாக 9 மணிக்கு மேல்தான் இரவு உணவை உட்கொள்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காகக் காலை வேலைகள் சீக்கிரமாகத் தொடங்கிவிடும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. தூங்கும் நேரமும் தூக்கத்தின் தரமும் மேம்பட வேண்டுமென்றால் இந்த நிலை மாற வேண்டும்." எனக் கூறியுள்ளார்.