70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு
குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் வகையில் செல்கிறது கெளண்டன்யா ஆறு. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் வந்தால் மக்கள் மறுகரைக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. 1954- இல் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட காமராஜா், குடியாத்தம் தொகுதி இடைத் தோ்தலில் வெற்றிபெற்று முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா். தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிபடி, பதவியேற்ற சில மாதங்களில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். 70 ஆண்டுகளாகியும் இந்த பாலம் உறுதித் தன்மையுடன் விளங்குகிறது. இதற்கிடையில் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏற்பட்டுள்ளன. நகராட்சி பொது நிதி சுமாா் ரூ. 8 லட்சத்தில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைத்து, தெரு விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, சி.என்.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.