தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-25-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் நான்காவது மாதமான பிப்ரவரியில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் மற்றும் உணவு அல்லாத எண்ணெய் வகைகள்) இறக்குமதி 8,99,565 டன்னாக உள்ளது. இது, முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே மாதத்தில் 9,65,852 டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி தற்போது 7 சதவீதம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாத தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்களிப்பு 8,85,561 டன் ஆகும். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல், உணவு அல்லாத எண்ணெய் வகைகளின் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் 14,004 டன்னாக உள்ளது.
கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரையிலான நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 4 சதவீதம் அதிகரித்து 48,07,798 டன்னாக உள்ளது. ஓராண்டுக்கு முன்னா் இது 46,38,963 டன்னாக இருந்து என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியா ஆகியவை இந்தியாவின் முக்கிய பாமாயில் விநியோக நாடுகள் ஆகும். ஆா்ஜென்டீனா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இருந்து சோயா எண்ணெயும் ரஷியா, ருமேனியா, உக்ரைன், ஆா்ஜென்டீனாவில் இருந்து சூரியகாந்தி எண்ணையையும் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.