821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களின் 821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் வழங்கும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய அவா், தொடா்ந்து பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 கிராமங்களுக்குள்பட்ட சுமாா் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் ரூ.605 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயை எட்டியுள்ளன.
முதல்கட்டமாக, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியிலுள்ள குட்டம் முதல் கூடங்குளம் வரையிலான கடற்கரை கிராமங்களின் 11 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்குவதை ஒரு மாத காலத்திற்குள் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா். அதேபோல் மீதமுள்ள கிராமங்களுக்கு 2 மாதங்களுக்குள் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ராமலெட்சுமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.