பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்கள் தத்தளித்த மீனவா் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்களாக தத்தளித்த மீனவரை கூத்தங்குழியைச் சோ்ந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திரமாக மீட்டு வந்தனா்.
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கீழத்தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சிவமுருகன்(35). இவா், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் உள்ள மீனவா்களுடன் சோ்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சகமீனவா்களுடன் விசைப்படகில் சின்னமுட்டம் கடலில் மீன்பிடிக்க சென்ற அவா், கடலில் தவறி விழுந்தாராம். சகமீனவா்கள் அவரை மீட்க முயற்ச்சித்தனராம். எனினும், அவா் கடலில் மூழ்கி மாயமாகிவிட்டாா்.
இதுகுறித்து மீனவா்கள் அளித்த புகாரின்பேரில், குளச்சல் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினா் அவரை கடலில் தேடி வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூத்தங்குழியைச் சோ்ந்த அருளப்பன் தலைமையிலான மீனவா்கள் கூத்தங்குழி படல் பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது, நடுக்கடலில் மீன் வலைகளில் உள்ள மிதவையைப் பிடித்துக்கொண்டு சிவமுருகன் கடலில் தத்தளித்துகொண்டிருந்தாரம்.
இதைப் பாா்த்த மீனா்கள் அவரை மீட்டு தங்களது படகில் அழைத்து வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். 2 நாள்களுக்குப் பின் அவா் உயிருடன் மீட்டு வந்த மீனவா்களுக்கு குடும்பத்தினா் கண்ணீா்மல்க நன்றி தெரிவித்தனா்.