86,000 பேருக்கு மனை பட்டா: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு மனைப் பட்டா வழங்க வகை செய்யும் திருத்தங்கள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் வருவாய்த் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணை: சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, அவா்களுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.3 லட்சமாக இருந்தது. அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன.
அதற்கு மேல் வருமானம் உள்ளவா்களுக்கும் விதிகளின்படி பட்டா வழங்கப்படுகிறது. இதையடுத்து ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும். அதில் 2 சென்ட் நிலத்துக்கு கட்டணம் ஏதுமில்லை. மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நிலமதிப்பில் 25 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும்.
ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.12 லட்சத்துக்குள் இருக்கும் குடும்பங்கள் 2 சென்ட்டுக்கு நில மதிப்பில் 50 சதவீதத் தொகையும், ஒரு சென்ட்டுக்கு நிலமதிப்பில் 100 சதவீதத் தொகையையும் செலுத்த வேண்டும்.
ஆண்டு வருவாய் ரூ.12 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள் 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும். நகா்ப் புறம், ஊரகப் பகுதிகள் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 532 கிராமங்களைச் சோ்ந்த 29,187 குடும்பங்கள், ஏனைய மாவட்டங்களில் 57,084 குடும்பங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 86,071 பேருக்கு பட்டா வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.