ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு
`89 வயதில் உலக சாதனை' - பிரிட்டிஷ் முதல் பாகிஸ்தான் வரை பாராட்டிய `ஃபௌஜா சிங்' சாலை விபத்தில் மரணம்
‘டர்பனட் டொர்னாடோ’ என்று அன்பாக அழைக்கப்படுபவர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி 114 -வது பிறந்த நாளைக் கொண்டாடிய இவர், 2000 முதல் 2013 வரை மொத்தம் 14 ஒன்பது முழு மராத்தான்களை ஓடியுள்ளார். ஏப்ரல் 1, 1911 அன்று பஞ்சாபின் பியாஸ் கிராமத்தில் பிறந்த ஃபௌஜா சிங், ஒரு விவசாய குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் இளையவர். 1993-ம் ஆண்டு இவரின் மனைவி கியான் கவுர் மரணமடைந்தார். அதன் பிறகு தன் மகனுடன் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார்.
இங்கிலாந்து சென்றதற்குப் பிறகு நடந்தவை குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``நான் ஒரு குழந்தையாக இருந்தபோது மிகவும் பலவீனமாக இருந்தேன். ஐந்து வயது வரை என்னால் சரியாக நடக்கவே முடியாது. அதன்பிறகு அதிக நேரம் பண்ணையில் செலவிட்டதாலும், என் குடும்பத்தினர் மற்றும் வாகேகுருவின் ஆதரவுடன், நான் நடக்க ஆரம்பித்தேன். இங்கிலாந்தில் இருந்த காலத்தில், என் வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவில் நீண்ட நடைப்பயணங்களையும், ஓட்டங்களையும் தொடங்கினேன்.
அப்போதுதான் மராத்தான் பயிற்சியாளர் ஹர்மந்தர் சிங்குடன் தொடர்ந்து ஏற்பட்டது. அவரின் ஆலோசனை மற்றும் பயிற்சியில் ஏப்ரல் 2000-ம் ஆண்டு லண்டன் மராத்தானில் 89 வயதில் போட்டியிட்டேன். அதை 6 மணி நேரம் 54 நிமிடங்களில் முடித்தேன். மூத்த வயது பிரிவில் இருந்த முந்தையை உலக சாதனையை முறியடித்திருக்கிறேன் எனக் கூறினார்கள். அதன்பிறகு பலப் போட்டிகளில் கலந்துகொண்டேன்." என்றார்.
தன் 100-வது வயதில் மராத்தானிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பியாஸ் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஆறு முறை லண்டன் மராத்தான், இரண்டு முறை டொராண்டோ மராத்தான், ஒருமுறை நியூயார்க் மராத்தான் என 9 மாராத்தான் போட்டிகளில் பங்குபெற்ற ஃபௌஜா சிங் வாழ்க்கை வரலாற்றை 'டர்பன்ட் டொர்னாடோ' என்றப் பெயரில் எழுதிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங், ``பாபா எப்போதும் இந்த உலகத்திற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருப்பார். உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பவர்.
ஃபௌஜா சிங்கிற்கு விளையாட்டு மற்றும் தொண்டுக்கான அவரது சேவைகளுக்காக 2015-ல் பிரிட்டிஷ் அரசு பதக்கம் வழங்கி கௌரவித்தது. லண்டன் ஒலிம்பிக்கிற்கான தீபம் ஏந்தியவர்களில் ஒருவர். 2013-ல் அமெரிக்காவில் தேசிய இனக் கூட்டணியால் அவருக்கு எல்லிஸ் தீவு பதக்கம் வழங்கப்பட்டது. அவர் பலமுறை ராணி எலிசபெத்தை சந்தித்திருக்கிறார். இவரது சாதனையை அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் பாராட்டியிருக்கிறார்" என்றார்.