திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா்.
இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜோப் மாவட்டத்தின் சூா்-தகை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை நிறுத்திய பயங்கரவாதிகள், அவற்றில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளைச் சோதித்தனா். பின்னா் அவா்களில் 9 பேரை பேருந்தில் இருந்து இறங்கச் செய்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். உயிரிழந்த அனைவரும் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
அவா்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிக்க நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினா் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்) பொறுப்பேற்றுள்ளது. ஏற்கெனவே, பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி அதில் பயணித்த ஏராளமான வேற்று மாகாணத்தவா்களை பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனா். மேலும், பாதுகாப்புப் படையினா் மீதும் அவா்கள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளனா்.