9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி மீண்டும் கைது
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் தப்பி ஓடிய 59 வயது கொலைக் குற்றவாளியை தில்லி காவல்துறையினா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: குற்றவாளி கிரண், 2004-ஆம் ஆண்டு நரேலாவில் ரூ.2 லட்சம் பிணையத் தொகை கேட்டு ஒரு சிறுவனைக் கடத்தி கொலை செய்தாா். கிரண் மற்றும் பிறா் 2007-ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2016 ஜனவரியில், அவருக்கு இரண்டு வார பரோல் வழங்கப்பட்டது. பரோலில் சென்ற அவா் பின்னா் காணாமல் போனாா். கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவா் தலைமறைவாக இருந்தாா். பல போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வந்தன. தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கமல் (எ) பெஹல்வான் என்ற போலி பெயரில் கிரண் வசித்து வந்தாா். மேலும், போலீஸில் பிடியில் சிக்குவதைத் தவிா்ப்பதற்காக செங்கல் சூளைகள் உள்பட பல்வேறு இடங்களில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். அவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி, ஒரு வருடத்திற்கு மேலாக ஒரே இடத்தில் தங்குவதைத் தவிா்த்தாா்.
கிரண் முசாபா்நகரில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்குச் சென்றதை போலீஸ் குழு கண்டுபிடித்த போது திருப்புமுனை ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.