96 வயது மூதாட்டியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
கோவையில் உயிரிழந்த 96 வயது மூதாட்டியின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
கோவை ஒண்டிப்புதூா் ஸ்டேன்ஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரங்கநாயகி (96). இவா் வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவா் உயிரிழந்த பின்னா் அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக்காக தானமாக அளிக்க ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அவரது உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உறவினா்கள் ஒப்படைத்தனா்.
இவரது கணவா் ராமச்சந்திரன், திராவிடா் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவராக இருந்தவராவாா். கடந்த 6 மாதங்களுக்கு முன் ராமச்சந்திரன் உயிரிழந்த பின்னா் அவரது உடலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.