Adani: 'ஒரு வாரமாக சரிந்த அதானி குழும பங்குகள்... இன்று ஏறுமுகம்' - காரணம் என்ன?!
அதானி மீதான அமெரிக்காவின் மோசடி குற்றசாட்டால் அதானி குழுமம் முதல் அதன் பங்குகள் வரை ஆட்டம் கண்டாலும், தற்போது மீண்டும் அது ஏறுமுகத்தில் நகர தொடங்கியிருக்கிறது.
மேலே சொன்னதற்கு உதாரணமாக, நேற்றைய அதானி குழுமத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான பரமாரிப்பு நிறுவனமான 'ஏர் வர்க்ஸ் (Air Works)' நிறுவனத்தை ரூ.400 கோடிக்கு வாங்கியுள்ளது. தற்போது, ஏர் வர்க்ஸ் நிறுவனத்தின் 85.8 சதவிகித பங்குகள் அதானி குழுமத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் உள்ளது.
ஏர் வர்க்ஸ் நிறுவனமானது இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களில் இயங்குகிறது. அதில் கிட்டதட்ட 1,300 பேர் பணிபுரிகின்றனர். மேலும், இந்த நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், உலகளவிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தை அதானி வாங்கி உள்ளதில் நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இதுவரை அதானி என்றால் போக்குவரத்து துறையில் 'துறைமுகம்...துறைமுகம், விமான நிலைய பராமரிப்பு' என்று அதிகம் கூறப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது மூலம் அதானி குழுமம் விமானத் துறையிலும் முக்கியப் பங்கு வகிக்க இருக்கிறார்கள்.
அதானி குழுமத்தின் இந்த முக்கிய நகர்வால் நேற்றைய பங்குச்சந்தை முடிவில் 2338.95 நிப்டி புள்ளிகளாக ஆக சரிவில் முடிந்த அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு, இன்று 2355.20 நிப்டி புள்ளிகளுடன் ஏறுமுகத்தில் தொடங்கியுள்ளது. நேற்று மட்டுமில்லாமல், கடந்த வாரம் முழுவதுமே, அதானியின் பங்குகள் சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வல்லுநர்கள், இன்று அதானி குழுமத்தின் பங்குகள் ஏறுமுகத்திலேயே இருக்கலாம் என்கிறார்கள்.