Housemates: "Sivakarthikeyan, Kaali Venkat மாதிரி நடிச்சு காட்டினாரு" - Director...
AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக்கிறதா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். குட் பேட் அக்லி படம் வெளியானதற்குப் பிறகு முழுவதும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.

நரேன் கார்த்திகேயன் + AK
2025-ம் ஆண்டின் துபாய் 24 மணி நேர ரேஸ் போட்டியில் பங்கெடுத்த அஜித் குமார், இந்த போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து, ``Spirit of the Race” என்ற சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் நடைபெறும் ஆசிய லீ மான்ஸ் தொடரில்(Asian Le Mans Series) பங்கெடுப்பதற்கான தயாரிப்புகளை அஜித் கார் ரேஸ் நிறுவனம் முன்னெடுத்துவருகிறது. LMP2, LMP3, GT வகுப்புகளில் அஜித் கார் ரேஸ் நிறுவனம் உட்பட பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் பெறும் புள்ளிகள் மூலமே FIA World Endurance Championship (WEC) போட்டியில் பங்குபெறுவதற்கான தகுதியாக மாறும். இந்த நிலையில், ஆசிய லீ மான்ஸ் தொடருக்கான தயாரிப்பாக, அஜித் குமார் ரேசிங் அணியில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் (48) இணைந்திருக்கிறார்.
பாக்கியம்... மரியாதைக்குரியது!
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பில், ``அஜித் குமார் ரேசிங் அணியின் புதிய உறுப்பினரான நரேன் கார்த்திகேயன் இணைந்திருக்கிறார். அவருடன் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும்.' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக நடிகர் அஜித் குமார், ``நரேன் அணியில் இணைவது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் பந்தயத்தில் ஈடுபடுவது மரியாதைக்குரியது. நரேனுடன், இந்த ஆசிய லீ மான்ஸ் தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது." எனப் புகழ்ந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து நரேன் கார்த்திகேயன், ``ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு அஜித்தை பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் இப்போது கார் பந்தயத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நம்பமுடியாத பயண அனுபவத்தை எதிர்பார்க்கிறேன்" என்றார்.
நரேன் கார்த்திகேயன்:
நரேன் தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர். தனது தந்தையால், சிறுவயது முதலே மோட்டார் ஸ்ப்ற்ட்ஸ் மீது பெரும் காதல் கொண்டவராக இருந்தார்.
1992-ம் ஆண்டு இந்திய ஃபார்முலா மாருதி பந்தயத்தில் நரேன் கார்த்திக் அறிமுகமானார். அதன் பின்னர் 1994-ல் பிரிட்டிஷ் ஃபார்முலா ஃபோர்டு வின்டர் சீரிஸ், 1996-ல் ஃபார்முலா ஆசியா, 1999-ல் கொரியா சூப்பர் பிரிக்ஸ், 2019-ல் சூப்பர் ஜிடி x டிடிஎம் ட்ரீம் ரேஸ் உட்பட பலப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். 2005, 2006, 2011, 2012-ம் ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் பந்தயங்களிலும் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவின் வேகமான கார் ரேஸராகக் கொண்டாடப்பட்டவர், ஃபார்முலா-1 ரேஸின் முன்னாள் வீரரான நரேன் கார்த்திகேயன். 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கார் ரேஸை இந்தியர்களிடையே குறிப்பாக, தமிழர்களிடையே பிரபலப்படுத்தியவர் இவர்தான். இந்தியாவின் மைக்கேல் ஷூமேக்கராக அடையாளம் காணப்பட்ட நரேன் கார்த்திகேயன், 2005-ம் ஆண்டு முதன்முதலாக ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். இவருக்குப் பிறகு இந்தியர்கள் யாரும் `ஃபார்முலா-1' எனப்படும் கார் ரேஸில் உச்சத்தைத் தொடவில்லை.
டிராக் ரெக்கார்டு!
1991-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி ரேஸில் 15 வயது சிறுவனாக வெற்றிபெற்று, சர்வதேச ரேஸ் பயணத்தைத் தொடங்கினார் நரேன் கார்த்திகேயன். 90-களில் பிரான்ஸில் கார் ரேஸ் பயிற்சி மேற்கொண்டவர், 14 வருட கடும் பயிற்சி, முயற்சிகளுக்குப் பிறகு 2005-ம் ஆண்டில் கார் ரேஸில் உச்சம் தொட்டார். 2005-ம் ஆண்டு ஜோர்டான் அணிக்காக முதன்முதலாக ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொண்ட நரேன் கார்த்திகேயன், அதிகபட்சமாக அமெரிக்க ரேஸில் நான்காவது இடம் பிடித்தார். ஆனால், `அந்த ரேஸில் முக்கியமான அணிகள் டயர் பிரச்னையால் ரேஸைப் புறக்கணித்ததால்தான் கார்த்திகேயனால் நான்காவது இடத்தைப் பிடிக்க முடிந்தது' என விமர்சனங்கள் எழுந்தன. எல்லா அணிகளும் பங்குகொண்ட ரேஸில் அதிகபட்சமாக மலேசிய ரேஸ் போட்டியில் 11-வது இடம் பிடித்தார் நரேன் .
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...