2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்
"யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை" என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அளித்திருக்கும் விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை பயனர்களுக்கு இலவசமாக இருந்தாலும், இதற்கான கட்டணங்களை யாரோ ஒருவர் ஏற்கனவே செலுத்தி வருகிறார் என்றும், செயல்பாட்டிற்கான செலவுகளை யார் ஏற்க வேண்டும் என்பதை அரசாங்கம் இறுதியில் தீர்மானிக்கும் என்றும் மல்ஹோத்ரா கூறினார்.
நாட்டில் பெருமளவில் பணித் தேவைகள் ஆன்லைன் வழியாகப் பெறப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பாலான மக்கள் பலரும் யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். பெரிய வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முதல் சாலையோர சிறு கடைகள் என அனைத்து இடங்களிலும் யுபிஐ செயலிகள் மூலமாகவே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் யுபிஐ மூலம் நடைபெறும பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ.70.7 கோடி அளவுக்கு யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்திருந்தது.
ஜூலை மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை 19.47 பில்லியனாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாகவும், இது மே மாதத்தில் நடந்த 25.14 டிரில்லியனுக்குப் பிறகு நடந்த இரண்டாவது அதிகபட்ச பரிவர்த்தனை என இந்திய தேசிய கொடுப்பனவு கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என ஒருபோதும் நான் கூறவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மும்பையில் புதன்கிழமை ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என அறிவித்தது.
பின்னா் செய்தியாளா்கர்கள் அவரிடம் யுபிஐ கட்டணம் பயன்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், யுபிஐ எப்போதும் நுகர்வோர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் என ஒருபோதும் நான் கூறவில்லை. இதற்கான கட்டணங்களை யாரேனும் ஒருவர் செலுத்தித்தான் ஆக வேண்டும். யுபிஐ பரிவர்த்தனை மாடல் அப்படியே நீடித்த நிலைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என நினைத்தால், அதற்கான செலவை யாரேனும் ஒருவர் செலுத்தித்தான் ஆக வேண்டும். ஆனால் அதனை தனிநபர்கள் செலுத்துகிறார்களா அல்லது அனைவரும் சேர்த்து செலுத்துகிறார்களா என்பதை கடந்து யாராவது ஒருவர் அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்பது முக்கியம். யுபிஐ பரிவர்த்தனை தற்போது கூட பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை, யாரோ ஒருவர் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்பதுதான் எனது கருத்து. அரசாங்கம் அதற்கு மானியம் வழங்குகிறது, ஆனால் எங்கோ, அதற்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன." எனவே யுபிஐ செயல்பாட்டிற்கான செலவுகளை யார் ஏற்க வேண்டும் என்பதை அரசாங்கம் இறுதியில் தீர்மானிக்கும் என்று மல்ஹோத்ரா கூறினார்.
இதையடுத்து நீண்ட நாள்களுக்கு யுபிஐ சேவைகள் இலவசமாகவே இருக்காது என்பதையும், அதற்குரிய ஒரு கூறிப்பிட்ட கட்டணத்தை நாம் செலுத்தக் கூடிய காலம் விரைவில் வரலாம் என்பதை குறிப்பிடாமல் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளைக் கையாளும் கட்டணத் திரட்டிகளுக்கு செயலாக்கக் கட்டணங்களை முறையாக அறிமுகப்படுத்திய முதல் வங்கியாக ஐசிஐசிஐ வங்கி மாறியுள்ளது. வணிகர்களின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.