Housemates: "Sivakarthikeyan, Kaali Venkat மாதிரி நடிச்சு காட்டினாரு" - Director...
ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!
பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்ததாக எழுந்த புகாரில், பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள திரையுலகில் ரதிநிர்வேதம், களிமண், சால்ட் அண்ட் பெப்பர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா மேனன். தமிழிலும் சில திரைப்படங்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான பிக் பாஸிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம், களிமண் போன்ற மலையாள திரைப்படங்களிலும், காமசூத்ரா போன்ற ஆணுறை விளம்பரத்திலும் ஆபாசமாக நடித்துள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவரது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டது.
எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவை அடுத்து கொச்சி போலீஸார் நடிகை ஸ்வேதா மேனன் மீது ஆபாசத் தடைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கான நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் தேர்தல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேர்களில் மூத்த நடிகர் ஜெகதீஷ் உள்பட நான்கு பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
எனவே, இந்த தேர்தலில் ஸ்வேதா மேன்ன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஸ்வேதா மேனன் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.