அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்
Anaswara Rajan Exclusive: ``குருவாயூர் அம்பலநடையில் பட வெற்றிக்குக் காரணம் இதுதான்''- அனஸ்வரா ராஜன்
மலையாள சினிமாவின் இளம் நடிகைகளின் லிஸ்டில் முக்கிய இடத்தைப் பிடித்து அமர்ந்திருக்கிறார் அனஸ்வரா ராஜன்.
இளம் வயதிலேயே டைட்டில் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்குமளவுக்கு சட்டென வளர்ந்திருக்கும் இந்த இளம் புயல்தான் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் `7ஜி ரெயின்போ காலனி - 2' படத்தின் நாயகி. சமீபத்தில் வெளியான `ரேகாசித்திரம்' என்ற மலையாள திரைப்படத்திலும் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். இப்படத்திற்காக வாழ்த்துகளைச் சொல்லி அவரிடம் பேசினோம்.
`ரேகாசித்திரம்' திரைப்படத்திற்கு எப்படியான வரவேற்பு கிடைத்திருக்கிறது ?
படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. நேர்மையாகச் சொல்லவேண்டுமென்றால் இப்படத்திற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கு எந்த வழியையும் நான் மேற்கொள்ளவில்லை. வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இப்படத்தின் கதையைக் கேட்டேன். இந்தக் கதையை கேட்டதுமே எனக்குப் பிடித்திருந்து. இப்படத்தில் நான் இருந்தாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்திருக்கிறது. படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
படத்தில் நீங்கள் மம்மூட்டியின் ரசிகையாக இருப்பீர்கள். நிஜத்தில் நீங்கள் எப்படியான மம்மூட்டி ஃபேன்?
(சிரித்துக்கொண்டே...) நான் மிகப்பெரிய மம்மூக்காவின் ரசிகை. சினிமாத்துறையை சேர்ந்த அனைவரும் மம்மூக்காவின் மிகப்பெரிய ரசிகர்கள்தான். இப்போதும் எப்படி எக்ப்ரீமென்டல் கதாபாத்திரங்களில் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார் என எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்!
`குருவாயூர் அம்பலநடையில்' மாதிரியான ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்கு இப்படியான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?
`குருவாயூர் அம்பலநடையில்' முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் சினிமா. அப்படியான காமெடியை நாங்கள் இங்கு அதிகமாக ரசித்திருக்கிறோம். அந்தப் படத்தில் இருக்கும் வகையிலான காமெடிகளை 90ஸ் சினிமாக்களில் மட்டும்தான் காண முடியும். எனக்கு அப்படியான காமெடி திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். அந்தக் காமெடிகளை பார்க்கும்போது நம்மால் மனதார சிரிக்க முடியும். அதுமட்டுமல்ல அப்படத்தை எடுத்த விபின் தாஸ் சிறந்த டைரக்டர். அவருடன் பணிபுரிய வேண்டும் என நான் விரும்பியிருக்கிறேன். நல்ல படக்குழுவோடு வேலை பார்க்கும்போது எந்தளவுக்கு அவுட்புட் அழகாக வருமென்பது நமக்கு முன்பே தெரியும். அந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்துப் பக்கங்களிலும் ஹிட்டடித்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தமிழில் கடைசியாக த்ரிஷாவுடன் `ராங்கி' திரைப்படத்தில் நடித்திருந்தீர்களே... தமிழ் சினிமா பயணம் எப்படி சென்று கொண்டிருக்கிறது?
ஆம், தமிழில் நடித்தது எனக்குப் புதுவகையிலான அனுபவம். மலையாள சினிமாவிலும் சில படங்கள் எனக்குப் புதிய அனுபவம்தான். பெரியளவில் பரிச்சயமில்லாத மொழி, மக்கள் என்பது போன்ற விஷயங்கள் எனக்குத் தமிழில் புதிதாக இருந்தது. அந்தப் படத்தில் த்ரிஷா மேம் மாதிரியான கோ - ஆர்ட்டிஸ்ட் கிடைத்தது மகிழ்ச்சி. கோலிவுட்டிலும் பயணம் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. இங்கு நாங்கள் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். எனக்குத் தமிழ் புரியும். அதே சமயம் கொஞ்சம் பேசவும் தெரியும்.
எப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விருப்பம் வைத்திருக்கிறீர்கள்?
எனக்கு கம்ஃபோர்ட்டான கதாபாத்திரங்கள் என எதுவும் கிடையாது. அதை உடைக்கத்தான் நான் எப்போதும் விரும்புவேன். என்னுடைய அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரே மாதிரியான சிரத்தை கொடுத்துதான் நடிக்கிறேன். சொல்லப்போனால்... எனக்கு அனைத்து வகையிலான கதாபாத்திரங்களிலும் நடித்துப் பார்க்கவேண்டும் என ஆசை இருக்கிறது. `நேரு' மாதிரியான திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் சவாலானதுதான். எனக்கு என்னுடைய திறன் மீது நம்பிக்கை இருக்கிறது. எப்படியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடித்துப் பார்க்கவேண்டும் என ஆசையிருக்கிறது.