திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
Anusree: "திருநர் சமூகத்தைக் கேலிச் சித்திரமாகவே படங்களில் காட்டுகிறார்கள்" - திருநங்கை அனுஶ்ரீ
கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு வருகை தந்து, தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறார் திருநங்கை அனுஶ்ரீ.
அனுஶ்ரீ இதற்கு முன்பே 'லவ் வித் டிரான்ஸ்ஜென்டர்' என்ற யூடியூப் வெப் சீரிஸில் நடித்து தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர்.
நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பெரும் சவால்களைச் சமாளித்து உடல் எடையையும் குறைத்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

அனுஶ்ரீ பேசுகையில், "என்னுடைய எடையால் நான் பல இடங்களில் நிராகரிப்பைச் சந்தித்திருக்கிறேன். அது எனக்கு பல வாய்ப்புகளுக்குத் தடையாக இருந்தது.
இப்போது ஆடிஷனில் நான் நன்றாக நடித்திருந்தாலும், என் எடையை ஒரு குறையாகச் சொல்வார்கள்.
அதற்காகவே நான் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து, முதலில் எடையைக் குறைக்கும் பல தனியார் நிறுவனங்களை அணுகினேன். பலரும் அங்குச் சென்றால் எடை குறையும் என்று சொன்னார்கள்.
ஆனால், அங்கு எனக்கு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. அதன் பிறகு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஜிம், யோகா போன்றவற்றையும் முயன்றேன்.
ஆனால், அதிலும் எனக்கு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. பிறகு, எங்கள் திருநர் சமூகத்தில் இருக்கும் ஒருவர் மூலமாக எடையைக் குறைக்க ஒரு அறுவை சிகிச்சை செய்தேன்.
அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களுக்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். உணவுகளாக, ஜூஸ், கஞ்சி போன்ற நீராகாரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.
அப்படியான உணவுகளைத்தான் இப்போதும் தொடர்ந்து சாப்பிடுகிறேன். அதனால், சிறிது நேரத்துக்கு மேல் ஒரு இடத்தில் நிற்க முடியாது, மயக்கம் வந்துவிடும்.

அப்படியான கடினங்களைச் சந்தித்துதான் இன்று 40 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்.
சொல்லப்போனால், இந்த எடையைக் குறைக்கும் முழு ப்ராசஸுக்கு எனக்கு மொத்தம் 8 லட்சம் செலவாகிவிட்டது. கடன் வாங்கித்தான் அந்தப் பணத்தைத் திரட்டி அறுவை சிகிச்சை செய்தேன்.
இவை அனைத்தும் செய்ததற்கு ஒரே காரணம், நடிப்புதான்!
நடிப்புதான் என்னுடைய பெருங்கனவு. நான் தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடும்போது, மதன் எனக்கு 'லவ் வித் டிரான்ஸ்ஜென்டர்' சீரிஸ் வாய்ப்பைக் கொடுத்தார்.
அந்த சீரிஸ்தான் என்னை அனுவாக மக்களிடம் கொண்டு சேர்த்தது. திருநர் சமூகத்தினருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.

இன்று வரை திருநர் சமூகத்தினரைக் கேலிச் சித்திரமாகவே திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள். சில திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலும் காட்டுகிறார்கள்.
எனக்கு சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இப்போது ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகியிருக்கிறேன்." என்றார் பெருமையுடன்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...