Asia Cup: ஆசிய கோப்பையில் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரேயஸ்; BCCI தேர்வுக் குழு தலைவர் கூறும் காரணம் என்ன?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர் ஃபார்மட்) வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இத்தொடருக்கான இந்திய அணிப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் செய்தியாளர்கள் முன்னிலையில், 15 வீரர்களை பி.சி.சி.ஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்தார். இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடனிருந்தார்.

15 பேர் கொண்ட அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
பேக்-அப் வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா
ஸ்ரேயஸ் புறக்கணிப்பு!
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு, பின்னர் ஐ.பி.எல் உட்பட அனைத்து உள்ளூர் போட்டிகளின் கோப்பையை வென்றதன் காரணமாக மீண்டும் இந்தாண்டு மார்ச்சில் சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்கப்பட்டார் ஸ்ரேயஸ் ஐயர்.
கிடைத்த வாய்ப்பில் ஸ்ரேயஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதைத்தொடர்ந்து, நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஒரு கேப்டனாகவும், 604 ரன்களுடன் ஒரு பேட்ஸ்மேனாகவும் முன்னின்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றார்.

எனவே, ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவர் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஒரு பேக்-அப் வீரராகக் கூட அணியில் ஸ்ரேயஸ் சேர்க்கப்படவில்லை.
அணி அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார், "எதிர்பாராத விதமாக ஜெய்ஸ்வால் இல்லை.
அபிஷேக் நன்றாக விளையாடுவதாலும், பந்துவீச முடியும் என்பதாலும் இவர்கள் இருவரில் ஒருவரைத் தவறவிட நேர்ந்தது.

அதேதான் ஸ்ரேயஸுக்கும், அது அவருடைய தவறல்ல. அதேசமயம் அது எங்களுடைய தவறும் அல்ல.
யாருக்கு மாற்றாக அவரை அணியில் எடுக்க முடியும். எனவே, தனக்கான வாய்ப்புக்காக ஸ்ரேயஸ் காத்திருக்க வேண்டும்.
அபிஷேக்குடன் ஓப்பனிங்கில் களமிறங்க கில் மற்றும் சாம்சன் சரியான தேர்வு. இருவரில் யார் அபிஷேக்குடன் ஓப்பனிங் இறங்குவார் என்பது துபாயில் தெரியும்" என்று கூறினார்.