பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
Camping: ரூ.1,500தான்.. பிச்சாவரம், ஏலகிரி... 'கேம்பிங்' - நியூ இயருக்கு இப்போவே பிளான் பண்ணுங்க!
இன்னும் இரண்டு மாதங்களில் கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகள் வரப்போகின்றன. அதற்கு இப்போதிருந்தே பிளான் பண்ணத் தொடங்கியிருப்பீர்கள்.
அந்த விடுமுறையைக் கொண்டாட வெளிநாடு, வெளிமாநிலத்திற்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில், நமக்கு பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு சூப்பர் டிரிப் அடிக்கலாம். இதை ட்ரிப் என்று கூறுவதை விட, 'கேம்பிங்' என்று சொல்வதுதான் சரியானது.
'கேம்பிங் என்றால் என்ன... அதன் பட்ஜெட் என்ன... அதன் என்ஜாய்மென்ட்' குறித்து நமக்கு சூப்பர் விளக்கம் தருகிறார் Exoticamp நிறுவனத்தின் இணை நிறுவனர் சுவாமிநாதன்.

"இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடம். அங்கே செங்கல் கட்டடத்திலோ, சிமென்ட் கட்டடத்திலோ இல்லாமல், ஒரு துணிக்கட்டடம் அதாவது டென்ட்டில் தங்கினால்... அது 'கேம்பிங்'.
அதிக மாசு இல்லாத 'ஜில்' காற்று, மழை பெய்யும்போது மண் வாசனை, ஆங்காங்கே நொடிக்கு ஒருமுறை கேட்கும் வித்தியாசமான பறவைகள் சத்தம், இயற்கைக்கும், நமக்கும் இடைவேளை ஒரே ஒரு கேன்வாஸ் துணி... மொத்தத்தில் இளையராஜா பாடல் போல... கேம்பிங் ஒரு லைஃப் டைம் அனுபவம். அமெரிக்கா போன்ற நாடுகளில், அரசாங்கம் ஒரு சில இடங்களை வரையறுத்திருக்கும். அங்கே நாமாகச் சென்று டென்ட் அமைத்து என்ஜாய் செய்யலாம். ஆனால், இது இந்தியாவில் சட்டத்திற்கு எதிரானது.
தமிழ்நாடு அரசின் விதிமுறைகள்...
ஆனால், தமிழ்நாடு அரசாங்கம் கேம்பிங்கிற்கு என்று தனி விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஃபாலோ செய்து லைசன்ஸ் பெற்றுதான் கேம்பிங் நிறுவனங்கள் கேம்பிங் பேக்கேஜை வழங்குகின்றன. இந்தக் கேம்பிங் சைட்டுகள் தனியார் இடங்களில்தான் இருக்கும். இதுவரை அரசிடம் எந்தக் கேம்பிங் சைட்டும் இல்லை.
தமிழ்நாடு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளில் கேம்பிங் எந்தெந்த இடங்களில் இருக்கலாம், மலை, நீர்நிலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கேம்பிங் சைட் இருக்க வேண்டும், அங்கே என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும், டென்ட் எப்படி அமைந்திருக்க வேண்டும், எத்தனை டென்ட்டிற்கு எவ்வளவு பாத்ரூம்கள் இருக்க வேண்டும் போன்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கும்.
இதை அத்தனையையும் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்குத்தான், கேம்பிங் லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.

தகுதி...
அதனால், கேம்பிங் செய்வதற்கு எந்தப் பயமும் தேவையில்லை. அனைத்து வசதிகளும் கேம்பிங் சைட்டில் பக்காவாக இருக்கும் என்பதால், அனைவருமே செல்லலாம்.
கேம்பிங் என்றால் டென்ட்டில் தங்கிவிட்டு வருவது மட்டுமல்ல. அங்கே இரவு ஸ்டார் கேஸிங் (Star Gazing), கேம்ப் ஃபயர், பேர்ட் ஸ்பாட்டிங் (Bird Spotting) போன்றவைகளும் இருக்கும். மலையிலோ மலை அருகிலோ கேம்பிங் சைட் இருந்தால் சின்ன ட்ரெக்கிங் இருக்கும்... நீர்நிலைகள் அருகில் இருந்தால், வாட்டர் கேம்ஸ் மாதிரியான செயல்பாடுகள் இருக்கும்.
டிரெக்கிங் Vs கேம்பிங்
ட்ரெக்கிங் என்றால் காடு அல்லது மலையில் ஒரு இலக்கை நோக்கி நகர்வோம். கேம்பிங் என்றால் ஒரு இடத்தில் தங்கி, நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை அனுபவிப்பது. தமிழ்நாடு அரசாங்கத்தின் ட்ரெக் தமிழ்நாடு அமைப்பும், தமிழ்நாடு வனத்துறையும் சேர்ந்து கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் பாதைகளை நிர்வகித்து வருகிறது.
குடியம் குகை, குள்ளர் குகை, ஜலகம்பாறை, சுவாமி மலை ஆகியவை அவற்றில் சில. ட்ரெக்கிங் செய்வதற்கென உடற்தகுதி தேவை. மேலும், உடற்தகுதிக்கு ஏற்ப எளிய, நடுத்தரம், கடினம் ஆகிய ஆப்ஷன்களையும் ட்ரெக்கிங்கில் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

என்னென்ன தேவை?
கேம்பிங் சைட்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், அதுகுறித்து பெரிதாகப் பயப்பட வேண்டியதில்லை. ஆனால், கேம்பிங் செல்லும்போது நம் தனிப்பட்ட விஷயங்களை மட்டும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். அதில் சன் ஸ்கிரீன், ஷூ, தொப்பி, ரெயின் கோட், கொசு விரட்டி, குளூகோஸ், தினம் பயன்படுத்தும் மாத்திரைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நேப்கின்கள் ஆகியவை அடங்கும்.
முக்கியமாக, கேம்பிங் அல்லது ட்ரெக்கிங் செல்லும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது கட்டாயம். இதற்கு ப்ளாஸ்டிக் கேன்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி கழிவறை போன்ற விஷயங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் பிச்சாவரம், ஏலகிரி, ஜவ்வாது, ஏற்காடு, கொல்லிமலை, நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல், வெள்ளிமலை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் கேம்பிங் சைட்கள் உள்ளன.
பட்ஜெட்
இதற்குப் பெரிய பட்ஜெட் எல்லாம் ஆகாது. கேம்பிங் பட்ஜெட் ரூ.1,500 - 3,500-க்குள்தான் இருக்கும். இது ஒரு இரவு, இரண்டு நாளுக்கான பேக்கேஜ். இந்தப் பேக்கேஜில் இரண்டு வேளைகளின் உணவும் அடங்கும்.
கேம்பிங்கிற்குப் பெரிய பட்ஜெட் தேவையில்லை. கிட்டத்தட்ட ரூ.8,000 பட்ஜெட்டில் நான்கு பேர் கொண்ட குடும்பம் கேம்பிங்கை முடித்துவிடலாம்".
ஆக, இதுவரை ஹாலிடே பிளான் இல்லாதவர்கள் கூட, பிளான் செய்து என்ஜாய் பண்ணிடுங்க மக்கா!