கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!
Cannes 2025: "அமெரிக்காவின் கலைவிரோத அதிபர்" - டிரம்பை விமர்சிக்கும் ஹாலிவுட் நடிகர்
78வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்தத் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் என்ற அடிப்படையில் 'Palme d’Or' என்ற உயரிய விருதை வருடந்தோறும் மூத்த கலைஞருக்குக் கொடுத்து கேன்ஸ் கௌரவப்படுத்தும்.

இந்த ஆண்டு இந்த விருதை ஹாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டி நீரோ பெற்றிருக்கிறார்.
விருதைப் பெற்றதோடு, அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை அவர் மேடையில் விமர்சித்துப் பேசியது பேசுபொருளாகியிருக்கிறது.
அவர் பேசுகையில், "எங்கள் நாட்டில் ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடி வருகிறோம்.
இன்று நாம் இங்கு ஒன்றுகூடியிருப்பது போல, கலை என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒன்று.
கலை உண்மையைத் தேடுகிறது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனால்தான் சர்வாதிகாரிகளுக்கு கலை அச்சுறுத்தலாக உள்ளது.
அதனால்தான் நாமும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறோம்.
அமெரிக்காவின் கலைவிரோத அதிபர், நமது முதன்மையான கலாசார நிறுவனங்களில் ஒன்றான கென்னடி மையத்தின் தலைவராகத் தன்னை நியமித்துக்கொண்டார்.

அவர் கலை மற்றும் கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டார். இப்போது, அவர் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
படைப்பாற்றலுக்கு விலை வைக்க முடியாது. இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது அமெரிக்காவின் பிரச்னை மட்டுமல்ல, இது உலகளாவிய பிரச்னை.
திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருக்கையில் அமர்ந்து பின்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சுதந்திரத்தைப் பற்றி கவலைப்படும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் சமயங்களில் நாம் வாக்களிக்க வேண்டும். இந்தத் திரைப்பட விழாவில் கலையைக் கொண்டாடுவதன் மூலம் நமது வலிமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுவோம்," என்றார்.