அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!
DC vs GT : 'சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்!' - டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்
'குஜராத் வெற்றி!'
டெல்லிக்கு எதிரான போட்டியை சுலபமாக வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வென்ற கையோடு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது குஜராத். அந்த அணியின் டாப் 3 வீரர்கள்தான் அவர்களின் பெரிய பலமே இந்தப் போட்டியிலும், அது மேலும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

டெல்லி அணி முதலில் பேட் செய்து 199 ரன்களை எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் க்ளாஸாக ஆடி 60 பந்துகளில் சதத்தை நிறைவு செய்திருந்தார். அவரின் ஆட்டத்தால்தான் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டியது. குஜராத்துக்கு 200 ரன்கள் டார்கெட்.
'குஜராத்தின் வெற்றிகரமான டாப் ஆர்டர்!'
பெரிய டார்கெட்தான். ஆனால், குஜராத் அணியிடம் எந்தப் பதற்றமும் இல்லை. ஏனெனில், அவர்களின் டாப் ஆர்டர் அத்தனை வலுவானது. நடப்பு சீசனின் ஆகச்சிறந்த டாப் 3 வீரர்கள் அவர்களிடம்தான் இருக்கிறார்கள். கில், சாய் சுதர்சன், பட்லர் என மூவரும்தான் அந்த அணியின் வெற்றி ரகசியம்.

நடப்பு சீசனில் மூவருமே 500+ ரன்களை அடித்திருக்கின்றனர். கில்லும் சாய் சுதர்சனும் முதல் இரண்டு இடங்களின் ஆரஞ்சு தொப்பிக்காக ஆரோக்கியமான முறையில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். நடப்பு சீசனில் சாய் சுதர்சனும் கில்லும் தலா 6 அரைசதங்களை அடித்திருக்கின்றனர். பட்லர் 5 அரைசதங்களை அடித்திருக்கின்றனர்.

ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் டாப் 3 இல் மூவரும் அரைசதம் அடிக்காமல் இருந்திருக்கின்றனர். அதேமாதிரி, எல்லா போட்டிகளிலுமே மூவரிடமிருந்தும் ஒரு பெரிய பார்டனர்ஷிப்பாவது வந்துவிடும்.
'கில் & சுதர்சன் கூட்டணி!'
மேலே கூறிய அத்தனையும் அப்படியே இன்றைய டெல்லிக்கு எதிரான போட்டியிலும் நடந்திருந்தது. 200 ரன்கள் டார்கெட்டை ஓப்பனிங் கூட்டணியான கில்லும் சாய் சுதர்சனுமே எடுத்துவிட்டனர். இருவருமே ஒருவரை ஒருவர் Complement செய்து ஆடும் விதம்தான் இந்தக் கூட்டணியின் சிறப்பு. இந்தப் போட்டியில் பவர்ப்ளேயில் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடினார்.

நடராஜன் வீசிய ஒரே ஓவரில் 20 ரன்களை எடுத்தார். சாய் சுதர்சன் அக்ரஸிவ்வாக ஆடியதால் கில் கொஞ்சம் நின்று ஆடினார். பவர்ப்ளே முடிகையில் சாய் சுதர்சன் 23 பந்துகளில் 44 ரன்களை எடுத்திருந்தார். கில் 13 பந்துகளில் 15 ரன்களை எடுத்திருந்தார். பவர்ப்ளே முடிந்தவுடன் அக்சரும் குல்தீப்பும் பந்துவீச வந்தனர். சாய் சுதர்சன் ஸ்பின்னுக்கு எதிராக கொஞ்சம் திணறினார். அந்த சமயத்தில் கில் ரிஸ்க் எடுத்து ஆடி சிக்சர்களை பறக்கவிட்டு ரன்ரேட்டை சரியவிடாமல் பார்த்துக் கொண்டார். இப்படி பரஸ்பரம் ஒவ்வொருவரின் ஆட்டத்தைப் புரிந்துகொண்டு இருவரும் ஆடுவதால்தான் இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கிறது.
'Low Risk Cricket'
மேலும், நவீன டி20 இன் சூழலில் அக்ரஸிவ்வாக இன்னோவேட்டிவ் ஷாட்கள் ஆடுவோர் மட்டுமே சர்வைவ் ஆக முடியும் என்பது போல ஒரு தோற்றம் உண்டாகியிருக்கிறது. சாய் சுதர்சன், கில் இருவருமே அந்த கருத்தை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். இருவருமே வலுவாக இழுத்து அடிப்பதை மட்டுமே நம்பாமல், டைமிங்கை நம்பி மரபார்ந்த ஷாட்களை நம்பி ஆடுகின்றனர்.

அவர்கள் நம்பும் அந்த ஸ்டைலில் இருவரும் வீழ்த்த முடியாத அளவுக்கு வலுவாகவும் இருக்கின்றனர். 'டி20 என்பதே சிக்சர்களாக அடிப்பதாக மட்டுமே பேசப்படுகிறது. 'High Risk High Reward' என்பதுதான் நவீன டி20 இன் பாணியாக இருக்கிறது. ஆனால், இவர்கள் Low Risk கிரிக்கெட் ஆடுகிறார்கள். பவர்ப்ளேயில் அவர்கள் அடிக்கும் பவுண்டரிக்களை பாருங்கள்.
இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வும் இருக்கிறது. அதுதான் அவர்களின் வெற்றி ரகசியமும் கூட.' என்கிறார் குஜராத் அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த பார்த்திவ் படேல்.
சாய் சுதர்சன் சதத்தையும் கடந்துவிட்டார். 61 பந்துகளில் 108 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 177. கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் சாய் சுதர்சன் அசத்துகிறார். குறிப்பாக, அவரின் Consistency தான் இங்கே ரொம்பவே முக்கியம். சமீபகாலமாக வேறெந்த வீரரிடமும் இல்லாத சீரானதன்மை அவரிடம் இருக்கிறது.

இப்படிப்பட்ட அணிக்கு பவர்ப்ளேயிலேயே விக்கெட் எடுத்தால் மட்டும்தான் வெல்ல முடியும். அதை டெல்லியால் செய்ய முடியவில்லை. இப்போது குஜராத் வென்றிருப்பதால் குஜராத் அணியோடு பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிட்டன.