அடித்து நொறுக்கிய சாய் சுதர்சன் - ஷுப்மன் கில்! அபார வெற்றியுடன் பிளே ஆஃபில் குஜ...
KL Rahul : 'திணறிய டெல்லி; க்ளாஸாக ஆடி சதமடித்த கே.எல்.ராகுல்!
'ராகுல் சதம்!'
டெல்லிக்கு கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டி இது. அதுவும் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக. ப்ளே ஆப்ஸ் ரேஸில் நீடிக்க வெற்றி தேவையான முக்கியமான போட்டியில் டெல்லி அணிக்காக சதமடித்து அசத்தியிருக்கிறார் கே.எல்.ராகுல். வழக்கம்போல ஒரு க்ளாஸான ஆட்டம்!

'டெல்லியின் பிரச்சனை!'
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனை மிகச்சிறப்பாக தொடங்கியிருந்தது. ஆடிய முதல் 4 போட்டிகளையும் வென்றிருந்தது. புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், திடீர் சறுக்கல். தொடர்ந்து போட்டிகளை தோற்று, இப்போது ப்ளே ஆப்ஸில் இடத்தைப் பிடிக்க போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.
'தீர்வாக வந்த ராகுல்!'
டெல்லி அணியின் சறுக்கல்களுக்கு மிக முக்கிய காரணம், அவர்களின் ஓப்பனிங் கூட்டணியின் சொதப்பலே. நடப்பு சீசனில் இந்தப் போட்டிக்கு முன்பாக மட்டும் 6 ஓப்பனிங் கூட்டணியை டெல்லி அணி முயன்று பார்த்திருந்தது. எந்த கூட்டணியுமே பெரிய பலனளிக்கவில்லை. ராகுல் ஒரு முறை ஓப்பனிங் இறங்கியிருந்தார். அந்தப் போட்டியை கடைசி வரை நின்று வென்றும் கொடுத்தார். அதன்பிறகும் அவரை தொடர்ந்து ஓப்பனிங் இறக்கவில்லை. மிடில் ஆர்டருக்கு மாற்றினார்கள்.

சீசன் தொடங்குவதற்கு முன்பாக கே.எல்.ராகுல்தான் ஓப்பனிங் இறங்குவதாக இருந்தது. ஆனால், திடீரென இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் ஐ.பி.எல் ஆட முடியாது எனக் கூறி வெளியேறிவிட்டார். ஆக, அவர் இல்லாத மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கே.எல்.ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கினார்கள்.
தேவைப்படும்போது அழைத்து ஓப்பனிங் இறங்க வேண்டும் என்பார்கள். ராகுலும் மறுப்பேதும் இன்றி இறங்கி அசத்துவார். மீண்டும் மிடில் ஆர்டருக்கு மாற்றிவிடுவார்கள். இதுதான் கதை. இதோ இப்போது எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டிய சூழலில் டெல்லி இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் ராகுலை ஓப்பனிங் இறங்கிவிட்டார்கள். மீண்டும் அணிக்கு பயனளிக்கும் வகையில் க்ளாஸான இன்னிங்ஸை ஆடி சென்றிருக்கிறார்.

'க்ளாஸான சதம்!'
குஜராத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் டெல்லிக்கு அவ்வளவாக வேகமெடுக்கவில்லை. பந்து சரியாக சிக்கவில்லை. இன்னொரு முனையில் டூப்ளெஸ்சிஸ் திணறினார். அதனால் அழுத்தம் கே.எல்.ராகுல் மீதுதான் இருந்தது. அதை அழகாக சமாளித்து சிராஜை அட்டாக் செய்தார். சஸ்பெண்ட்டிலிருந்து மீண்டு வந்திருக்கும் ரபாடாவை செட்டிலே ஆகவிடாமல் அடித்தார்.
அவர் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 17 ரன்களை அடித்தார். டெல்லியில்தான் போட்டி நடந்தது. போட்டி நடந்த இந்த பிட்ச்சில் ஸ்பின்னர்களின் எக்கானமி 6 யைச் சுற்றிதான் இருக்கிறது. ஆக, ஸ்பின்னர்கள் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால், ராகுல் ரஷீத் கானை அடுத்தடுத்து பவுண்டரியாக்கிதான் அரைசதத்தைக் கடந்தார். பார்மில் இருக்கும் சாய் கிஷோரின் ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிக்களை அடித்தார்.

பர்ப்பிள் கேப்பை வைத்திருக்கும் பிரஷித் கிருஷ்ணாவை நின்ற இடத்திலேயே நின்று மணிக்கட்டின் உதவியுடன் அற்புதமாக பேட்டை சுழற்றி சிக்சராக்கினார். மொத்தத்தில் க்ளாஸ் தாண்டவம் ஆடி 60 பந்துகளில் சதத்தைக் கடந்தார். இன்னிங்ஸின் முடிவில் 65 பந்துகளில் 112 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
கே.எல்.ராகுல் மாதிரியான வீரர்கள் ஒரு அணிக்கு கிடைக்கப்பெற்ற வரம் என்றே சொல்லலாம்.