DD Next Level: "இப்போ ஆக்ஷன் படங்கள்தான் அதிகமா வருது; சந்தானத்தை மிஸ் பண்றோம்!" - சிம்பு
சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இங்கு பேசிய சிம்பு, "தில்லுக்கு துட்டு 1, 2 படங்களை பார்த்து நான் ரொம்ப ரசிச்சிருக்கேன். நண்பன் என்பதை தாண்டி நான் சந்தானத்தின் மிகப்பெரிய ரசிகன்.
அப்படித்தான் அவருடைய படங்களைப் பார்ப்பேன். படம் பார்க்கும்போது எங்களுக்குள்ள இருக்கிற நட்பை ஓரமாக வச்சுடுவேன்.
ஆர்யா என்னுடைய நண்பர். தயாரிப்பாளராக ஆர்யாவுக்கு இது வெற்றி படமாக அமையும்.
அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் சந்தானமோட உழைப்பு அப்படியேதான் இருக்கு.
ரெடின் கிங்ஸ்லியை உங்களுக்கு இப்பதான் தெரியும். எனக்கு 'வேட்டை மன்னன்' படத்துல இருந்தே தெரியும். படத்துல எங்க இயக்குநர் கெளதம் மேனன் சாரை இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.
அந்த ஒரு விஷயத்துல மட்டும் சும்மாவிட மாட்டேன் (சிரிக்கிறார்). சந்தானம் பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே இருக்கலாம்.
என்கிட்ட பலரும் 'சந்தானம் பேசுற அத்தனை நிகழ்வுகளிலும், பேட்டிகளிலும் உங்களைப் பத்தி பேசிடுறாரே! அது எப்படி'னு கேட்பாங்க. அதுதான் சந்தானம்.

அதுதான் அவருடைய கேரக்டர். ஒருத்தருக்கு நீங்கள் பல சமயங்கள்ல ஹெல்ப் பண்ணலாம். அந்த ஹெல்ப்பை எதிர்பார்க்காமல் பண்ணுங்க.
சிலர் நம்ம பண்ண ஹெல்பை நினைவுல வச்சு மரியாதைக் கொடுப்பாங்க. சிலர் அதுக்கு மரியாதை கொடுக்காமல் கடந்து போகலாம்.
ஆனா, நீங்க `இதுதான் நான், எனக்கு உதவி பண்றதுக்கு பிடிக்கும்'ங்கிற எண்ணத்துல இருக்கணும். இது மாதிரிதான் சந்தானம். இந்த நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் சந்தானத்துக்கு நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.
'STR49' மறுபடியும் எங்க காம்போ வந்திருக்கு. இப்போ சினிமாவுல காமெடி கம்மியாக இருக்கு.
ரொம்ப சீரியஸான படங்கள் எடுக்க தொடங்கிட்டோம். நாங்க பண்ற பெரும்பாலான படங்கள் ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு.
ஜாலியான, சாஃப்டான படங்களும் வரணும். சந்தானம் மாதிரியான ஒரு நபரை நம்ம ரொம்ப மிஸ் பண்றோம். ஹீரோவை தாண்டி என்கூட, ஆர்யாகூட, அவருக்குப் பிடிச்ச இயக்குநர்களோட அவர் வேலை பார்க்கணும்னு அவரை நான் கேட்டுக்கிறேன்.

அதுக்கு ஒரு ஆரம்பமாக என்னுடைய 49-வது படம் இருக்கும்.
நிறைய பேர் அவர் பண்ணுவாரானு கேட்டாங்க. நான் ஒரு போன் பண்ணினால் அவர் கண்டிப்பாக வந்திடுவார்.
எங்களுக்குள்ள இருக்கிற நட்பு அப்படி. இனிமேல், இது மாதிரி சந்தானத்தை பல படங்கள்ல பார்ப்பீங்க." என உற்சாகத்துடன் பேசினார்.