Dhanushkodi: "60-ம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்..." - சோக நினைவுகளைப் பகிரும் நேரில் பார்த்த சாட்சி
காற்றின் வேகத்தால் திரும்பி நின்ற கைகாட்டி... கடல் அலையின் கோரத்தால் கவிழ்ந்து போன ரயில் பெட்டி..! தனுஷ்கோடியை மூழ்கடித்த ஆழிப்பேரலையின் 60 ஆம் ஆண்டு..
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் துறைமுக நகரமான தனுஷ்கோடியும் அங்கு வாழ்ந்த மக்களும் கடலுக்கு இறையாகிப் போன நினைவலைகளின் 60-ம் ஆண்டு இது. சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கும் சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகராக விளங்கியது தனுஷ்கோடி. வெள்ளையர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்குப் பெரும் உதவியாக இருந்த துறைமுகமாகவும் விளங்கியது. விமானச் சேவைகள் மேம்படாத காலத்தில் பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற தொழிலாளர்களுக்கான எளிய வழியாகவும் இருந்தது தனுஷ்கோடி.
இலங்கை என்ற மலைப்பகுதியைப் பொன்விளையும் பூமியாக மாற்றுவதற்காக, ஆயிரமாயிரம் இந்தியர்களை அடிமைகளாக இலங்கைக்குக் கொண்டு செல்ல துணையாக இருந்ததும் இந்த தனுஷ்கோடி துறைமுகம்தான். இத்தகைய பல வரலாற்றுப் பதிவுகளுக்குச் சான்றாகத் திகழ்ந்து விளங்கிய தனுஷ்கோடி துறைமுக நகரத்தை, ஒரே இரவில் புரட்டிப் போட்டது ஆழிப்பேரலை.
1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களையும், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கானவர்களையும் ஒரு சேர கடலுக்குள் இழுத்துச் சென்றது அந்த கோரப் புயல். மனித உயிர்களை மட்டுமல்லாது கால்நடைகள், துறைமுக கட்டிடங்கள், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், நிர்வாக அலுவலகங்கள், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் என எதனையும் விட்டு வைக்காமல் தனது கோரப் பசிக்கு ஆட்படுத்திய ஆழிப்பேரலையின் வேகத்திற்கு மிச்சமாக நின்றது சிதிலமடைந்த கட்டிடங்களும் சில நூறு மனிதர்களும்தான்.
புயலுக்குப் பின் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடி, அழிவினைக் கண்ட நேரடி சாட்சிகளான சிலரில், அங்குள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிரான்சிஸ் லெளஜாயிம் ஒருவர். இவர் ராமநாதபுரம் அருகே உள்ள முத்துப்பேட்டை என்ற சிற்றூரில் வசித்து வருகிறார். 1964 டிசம்பர் 22 நள்ளிரவில் எழுந்த கோரப் புயல் குறித்துப் பேசும் அவர், "ராமேஸ்வரம் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராடிய பின்னர்தான் கோயிலுக்குச் செல்வார்கள். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்ல நேரடி ரயில் போக்குவரத்து கிடையாது. பாம்பனிலிருந்துதான் தனுஷ்கோடிக்கு ரயில் மூலம் செல்ல முடியும்.
அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை செல்பவர்களுக்கும் இதுதான் வழி. இதனால் தனுஷ்கோடி பகுதியில் இரு இடங்களில் ரயில் நிலையம் இருந்தது. அதில் ஒன்று இலங்கை செல்லும் கப்பல்கள் நிற்கும் பாலம் ரயில் நிலையம். இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்தார்கள். அவர்களுக்கான குடியிருப்புகளில் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவர்களைப் போன்றே, கப்பல் பணியாளர்கள், சுங்கத்துறையினர், போலீஸார், அஞ்சலக ஊழியர்கள், உள்ளூர் மீனவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குக் குடியிருந்தனர். இவர்களது குழந்தைகள் கல்வி கற்பதற்காகத் தனுஷ்கோடியில் 8-ம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய பள்ளி இயங்கி வந்தது. அங்கு என்னுடன் சேர்த்து 11 ஆசிரியர்கள் வேலை பார்த்தோம்.
300-க்கும் அதிகமான பிள்ளைகள் படித்தார்கள். நானும் என்னுடன் வேலை பார்த்த இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து ரயில்வே குடியிருப்பில் வாடகைக்குத் தங்கியிருந்தோம். தனுஷ்கோடியில் மின்சார வசதி இல்லாததால் 6 மணிக்கு மேல் அரிக்கேன் விளக்கு வெளிச்சம் மட்டுமே இருக்கும். புயல் துவங்கிய 22-ம் தேதி எப்போதும் போலவே பொழுது விடிந்தது. அன்றைக்குக் காலையில் நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் தனுஷ்கோடி வந்திருந்தார்கள். கடலில் குளித்த அவர்களைக் காண ஏராளமானோர் கூடிவிட்டனர். சுற்றுலா வந்த சிலர் தாங்கள் கொண்டு வந்த கேமராவில் ஜெமினியையும், சாவித்திரியையும் படம் எடுத்தனர். இதனைக் கண்ட ஜெமினி, கேமராவை கீழே தட்டிவிட்டு கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்நேரம் லேசான மழை தூரத் துவங்கியது. இதையடுத்து ஜெமினியும், சாவித்திரியும் தனுஷ்கோடியிலிருந்து புறப்பட்ட போட் மெயில் ரயிலில் பாம்பனுக்குச் சென்றனர். அன்று தனுஷ்கோடியிலிருந்து அவர்கள் வெளியேறி இருக்காவிட்டால் அவர்களும் கடலுக்கு இரையாகி இருப்பார்கள். இதன் பின்னர் இரவு 7 மணிக்குப் புயல்காற்றுடன் மழையும் கொட்டத் துவங்கியது. இதனால் எல்லோரும் வீட்டுக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டோம். நேரம் செல்ல செல்ல காற்றும் மழையும் அதிகரித்ததுடன் குடியிருப்புப் பகுதிகளிலும் கடல் நீர் புகத் தொடங்கியது. நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளியேறி உயரமான மணல் திட்டின் மீது ஏறி நின்றோம்.
தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்த ஒத்தைக் கைகாட்டி காற்றின் வேகத்தால் பழுதடைந்து திசை மாறி கிடந்தது. அந்நேரம் பாம்பனிலிருந்து வந்த ரயிலுக்கு இதனால் சிக்னல் கிடைக்கவில்லை. நீண்ட நேரமாக விசில் சத்தம் கொடுத்தும் பதில் இல்லை. இதையடுத்து என்ன பிரச்னை என அறிய டிராலியில் ரயில்வே அதிகாரி சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் வடக்குக் கடல் கொந்தளித்து ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் புகத் தனுஷ்கோடி நகரம் முழுவதும் மூழ்கிப் போனது. பலர் உயரமான கட்டிடங்கள், மணல் திட்டுகள் மீது ஏறி உயிர் பிழைத்தார்கள். அதேநேரத்தில் சிக்னலுக்காகக் காத்திருந்த ரயில், கடல் அலைகளில் சிக்கிக் கவிழ்ந்தது.
ரயிலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் சுமார் 300 பயணிகள் கடலில் மூழ்கி பழியாகினர். அதிகாலை 4 மணிக்கு மேல் கடலின் சீற்றம் குறையத் தொடங்கியது. விடிந்த பிறகு ஊருக்குள் சென்றபோது, பார்த்த இடமெல்லாம் பிணக்குவியல்களாகக் கிடந்தன. சிலர் குற்றுயிராக ஆடைகள் ஏதும் இன்றி கிடந்தார்கள். அவர்களில் என்னுடன் வேலை பார்த்த ஆசிரியரும் ஒருவர். புயலிலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து குடும்பத்துடன் வெளியே வந்துள்ளார். ஆனால் வரும் வழியிலேயே இவரது குடும்பத்தினரைக் கடல் அலைகள் இழுத்துச் செல்ல இவர் மட்டும் உயிருக்குப் போராடியபடி கிடந்தார்.
என்னுடைய வேட்டியில் பாதியை அவருக்குக் கொடுத்து மீட்டு வந்தோம். ரயில்வே கேண்டீன் மூலம் உணவு மற்றும் பால் தயார் செய்து உயிர் பிழைத்தவர்களுக்குக் கொடுத்தார்கள். புயலின் கோரத்தில் தகவல் தொடர்பு சாதனங்களும், இலங்கைக்குக் கடல் வழியாக அமைக்கப்பட்டிருந்த கேபிளும் முற்றிலும் சேதமாகியது. இதனால் தனுஷ்கோடியைப் புயல் தாக்கிய தகவல் 2 நாட்களுக்குப் பின்னரே வெளி உலகிற்குத் தெரியவந்தது.
இதையடுத்து விமானம் மூலம் அங்கு உணவு பொட்டலங்கள் போட்டார்கள். அதுவும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை.
கிடைத்த உணவை வைத்துச் சமாளித்தபடி கால்நடையாகவே பாம்பனுக்கு வந்து சேர்ந்த எங்களை அங்கிருந்து படகு மூலம் மண்டபத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்குள்ள அகதிகள் முகாமில் புயலால் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைத்துப் பராமரித்தனர். அன்றிலிருந்து மக்கள் நடமாட்டம் இன்றி இருந்து வந்த தனுஷ்கோடி சில ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலாத் தளமாக மாறிப் போனது'' எனத் தனது நினைவுகளைப் பகிர்ந்தார்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் புயலின் எச்சமாக நிற்கும் தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலக கட்டிடம், ரயில் நிலைய கட்டிடம் உள்ளிட்டவற்றை இன்றைக்கும் ஆண்டுதோறும் எழும் கடல் அலைகள் தழுவிச் செல்கின்றன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...