மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
Dinga Dinga: உடலை ஆட வைக்கும் 'டிங்கா டிங்கா' காய்ச்சல்... 1518-ல் வந்த நோய் மீண்டும் வருகிறதா?
உகாண்டா நாட்டிலுள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் 'டிங்கா டிங்கா' என்று அழைக்கப்படும் விசித்திரமான புதிய நோய் பரவி வருகிறது. 'டிங்கா டிங்கா' என்னும் வார்த்தை நடனம் போல நடுங்குவதைக் குறிக்கிறது. தற்போது இந்த வைரஸானது உகாண்டாவில் 300-க்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ளது. ஆனால், இதுவரையிலும் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டின் சுகாதார அமைப்பு கூறுகிறது. டிங்கா டிங்கா வைரஸ் நோய் 1518-ல் தோன்றிய 'டான்சிங் பிளேக் நோய்' போன்றதாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
டான்சிங் ப்ளேக் நோய்
உகாண்டாவில் 300 பேரைப் பாதித்துள்ள 'டிங்கா டிங்கா' வைரஸின் ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறி, உடம்பைக் கட்டுப்படுத்த முடியாத குலுக்குதல் ஆகும். இது கிட்டத்தட்ட நடனம் ஆடுவது, சுழல்வது மற்றும் நடுங்குவது போல இருக்கிறது. இந்தத் தன்மை டான்சிங் ப்ளேக் நோயுடன் ஒத்துப்போகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். கூடவே, அதிக காய்ச்சல் மற்றும் தீவிர சோர்வு, நடக்க இயலாமை, பக்கவாதம் போன்ற அசைவின்மையும்கூட 'டிங்கா டிங்கா'வால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகிறது என்கிறார்கள். இந்த வைரஸானது பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளையே பாதித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குணமடையும் தன்மை
புண்டிபுக்யோ மாவட்டத்தின் சுகாதார அதிகாரி மருத்துவர் கியிடா கிறிஸ்டோபர் கூறுகையில், "பெரும்பாலான நோயாளிகள் மருத்துவச் சிகிச்சை பெற்ற ஒரே வாரத்தில் குணமடைகிறார்கள். நிரூபிக்கப்படாத மூலிகை மருந்துகளை நம்புவதற்குப் பதிலாக, மாவட்ட சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். புண்டிபுக்யோ மாவட்டத்திற்கு வெளியே நோய்ப் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உகாண்டாவின் சுகாதார அமைச்சகத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்வதற்காகப் பாதிக்கப்பட்ட நபர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரவில்லை" என்றிருக்கிறார்.
பரவுவதைத் தடுக்க...
இந்த நோய் பரவுவதைத் தடுக்க, சுகாதார அதிகாரிகள் நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகளைத் தவிர்க்கவும், புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக உள்ளூர் சுகாதாரக் குழுக்களுக்குத் தெரிவிக்கவும் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...