மக்கள் ஆட்சிக்கு இந்திரா காந்தி உத்வேகம்: தெலங்கானா முதல்வர்
Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... Kawasaki பாதிப்பு.. தீர்வு என்ன?
Doctor Vikatan: என் நண்பனின் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செய்து எல்லா சோதனைகளும் செய்தார்கள். கடைசியில் கவாஸகி ( Kawasaki disease) என்ற பிரச்னை பாதித்திருப்பதாகச் சொல்கிறார். அது என்ன பிரச்னை? அதற்கு என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும்?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள்நல மருத்துவர் சஃபி
ஒன்றரை வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது என்றால், குழந்தையின் நோய் எதிர்ப்பு வினையில் (Immune Response) பிரச்னை இருக்கவே வாய்ப்புகள் அதிகம். மரபியல் ரீதியான பிரச்னைகள் காரணமாகவோ, அசாதாரண நோய் வினையாற்றல் பிரச்னை காரணமாகவோ இப்படி ஏற்படலாம்.
உங்கள் குழந்தைக்கு இருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ள 'கவாஸகி' பாதிப்பின் காரணமாகவும் இப்படி ஏற்படலாம். இந்தப் பிரச்னையை 'கவாஸகி சிண்ட்ரோம்' ( Kawasaki syndrome ) என்றே சொல்வோம். இந்தப் பிரச்னையில் நிறைய அறிகுறிகள் சேர்ந்து காணப்படும். இது ரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. இதை 'மியூகோடேனியஸ் லிம்ஃப் நாட் சிண்ட்ரோம்' (mucocutaneous lymph node syndrome) என்றும் சொல்வோம். நோய் எதிர்ப்பு வினையாற்றலானது குழந்தைகளின் ரத்தக் குழாய்களை பாதிக்கும் பிரச்னை என்றுகூட புரிந்துகொள்ளலாம்.
இந்தப் பிரச்னையின் காரணமாக இதயத்தின் தமனிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படும். எனவே, இந்தப் பிரச்னையை சற்று கவனமாகத்தான் கையாள வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கான இதயநோய் சிறப்பு மருத்துவர்கள் இருப்பதால், அவர்கள் இந்தப் பிரச்னைக்கான சிகிச்சைகளைப் பார்த்துக்கொள்வார்கள். மற்றபடி இந்த பாதிப்பு குறித்து பெரிய அளவில் பயப்பட வேண்டியதில்லை. கவாஸகி பிரச்னைக்கென பிரத்யேக சிகிச்சைகள் உண்டு. சிகிச்சைகளைவிடவும், ஃபாலோ அப் முக்கியம். மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் குழந்தை இருக்க வேண்டியது அவசியம். இன்றைய நவீன மருத்துவத்தில் மிக நல்ல மருந்துகளும் சிகிச்சைகளும் இருப்பதால் இந்தப் பிரச்னை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...