MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
Doctor Vikatan: கொளுத்தும் வெயில், அம்மை நோய் பாதிப்பு வராமல் தடுக்க என்ன வழி?
Doctor Vikatan: அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என பலரின் வீடுகளிலும் யாரோ ஒருவருக்கு அம்மை பாதித்திருப்பதைக் கேள்விப்படுகிறோம். அம்மை நோய் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக ஏதேனும் செய்ய முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

'அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்' என ஒரு கூற்று உண்டு. அதாவது பூமியில் என்ன மாற்றங்கள் நடந்தாலும் அதன் பிரதிபலிப்பு உடலிலும் நிகழும். அந்த வகையில் கோடையின் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள சில விஷயங்களைப் பின்பற்றலாம்.
அந்த வகையில், இந்தக் கோடைக்காலத்தில் வெளியில் உள்ள வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடலில் சிலவகை கிருமித் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கோடையில் ஏற்கெனவே புறச்சூழல் வெப்பமாக இருக்கும் நிலையில், உடல் சூட்டை அதிகரிக்கும் விஷயங்களைச் செய்யக்கூடாது. உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வாரத்துக்கு 3 நாள்கள் தலைக்குக் குளிக்கலாம். வெயிலில் இருந்து தப்பிக்க எப்போதும் ஏசியில் இருக்க வேண்டியதில்லை. வெட்டிவேர், விளாமிச்சை வேர் போன்றவற்றால் செய்த தட்டிகள் கிடைக்கும். நாம் இருக்கும் இடத்தில் இவற்றைக் கட்டிவைத்துவிட்டு, அவ்வப்போது தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தாலே, இயற்கையான குளிர்ச்சி கிடைக்கும். சாமிப்படங்களுக்குக்கூட நிறைய பேர் வெட்டிவேர் மாலைகளைச் சாத்துவார்கள். வாசனையையும் கொடுக்கும், கூடவே குளிர்ச்சியையும் தரும்.

சுத்தமான துணியில் வெட்டிவேர் அல்லது விளாமிச்சை வேர் போன்றவற்றை மூட்டையாகக் கட்டி, குடிநீரில் போட்டு வைத்துவிடலாம். இரண்டு நாள்களுக்கொரு முறை மூட்டையை அவிழ்த்து உள்ளே உள்ளவற்றை மாற்றினால் போதும். இந்தத் தண்ணீரைக் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
எலுமிச்சை சாறு, நன்னாரி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதும் குளிர்ச்சியைக் கொடுக்கும். தாழம்பூவுக்கு அம்மையைத் தடுக்கும் குணம் உண்டு. மருத்துவ ஆலோசனையோடு தாழம்பூ மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம்.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து உபயோகிக்கலாம். இளநீரும் கரும்பு ஜூஸும் பானகமும் நிறைய குடிக்கலாம்.
முதல் நாள் இரவு வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றிவைத்துவிட்டு மறுநாள் அதில் உப்பும் மோரும் சேர்த்து, சின்ன வெங்காயத்தோடு குடிக்கலாம்.
லஸ்ஸி என்று சொல்லக்கூடிய தயிரில் சர்க்கரை சேர்த்த பானம் குடிக்கலாம். பனஞ்சாறு குடிக்கலாம். இப்படிப்பட்ட பழக்கங்கள் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும். உடலைக் குளிர்ச்சியாகவும் வைக்கும். வெப்பத்தால் ஏற்படக்கூடிய மாறுபாடுகளையும் கிருமித் தொற்றுகளையும் தடுக்கும். அந்த வகையில் அம்மை நோயும் தடுக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.