ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை...
Doctor Vikatan: சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் கற்பூராதி தைலம்; எல்லோரும் பயன்படுத்தலாமா?!
Doctor Vikatan: குழந்தைகளுக்கு சளி, மூச்சுத்திணறல் ஏற்படும்போது கற்பூரம் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். ஆனால், சித்த மருத்துவத்தில் கற்பூராதி தைலம் பயன்பாட்டில் இருக்கிறதே... அது கற்பூரம் கொண்டு செய்யப்படுவதா... அதைப் பயன்படுத்துவதால் பாதிப்புகள் வராதா... அதை எந்தெந்தப் பிரச்னைகளுக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
கற்பூராதி தைலம் என்பது பன்னெடுங்காலமாக சித்த மருத்துவத்தில் இருக்கும் ஒரு மருந்து. மக்களிடம் பல காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளில் இது முக்கியமானதும்கூட.
கற்பூராதி தைலம் சரியாக, முறையாகத் தயாரிக்கப்பட்டதா என்பதுதான் இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். கற்பூராதி தைலம் தயாரிக்க பூங்கற்பூரத்தையே பயன்படுத்துவார்கள். அதாவது பூங்கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சித் தயாரிப்பார்கள். தேங்காய் எண்ணெயில் குறிப்பிட்ட அளவு மட்டுமே பூங்கற்பூரம் சேர்க்கப்படும். அது எண்ணெயாகத் தயாராகி வரும் பக்குவத்தில், கற்பூரத்தின் அதிகபட்ச வீரியம் குறைந்துவிடும். கற்பூராதி தைலம் என்பது முழுக்க முழுக்க வெளிப்பிரயோகத்துக்கான மருந்து என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தசைவலிகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு அந்த இடத்தில் மட்டும் லேசாகத் தடவிக் கொள்ளலாம். இந்த எண்ணெயை லேசாக சூடாக்கி, வலியுள்ள இடத்தில் தடவினால், அதன் விறுவிறுப்புத் தன்மை வலியிலிருந்து நிவாரணம் கொடுப்பதைப் பார்க்கலாம். கற்பூராதி தைலத்தின் வாசனை காரணமாக, மூக்கின் அருகே கொண்டு செல்வது, மூக்கில், முகத்தில் தடவுவதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
வலிகளுக்குத் தடவும்போது, அதில் உள்ள கற்பூரமானது சருமத்தின் வழியே ஊடுருவி உள்ளே போகும் அளவுக்கெல்லாம் இருக்காது. குழந்தைகளுக்கு எந்த மருந்தையும் மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகிக்கவே கூடாது. எந்த மருந்து, எப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. பெரியவர்கள், தாராளமாக கற்பூராதி தைலம் உபயோகிக்கலாம். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தல்ல என்பதால், இதில் பயமும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.