தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம...
Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?
Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்போ எடுப்பது தவறா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி
பொதுவாக, ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொருவித தன்மைகள் இருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் தன்மை வேறு. வலி நிவாரணிகளின் தன்மை வேறு.
ஒவ்வொரு மருந்தும் ஒவ்வோர் இடத்தில் செயலாற்றும். சாப்பிட்டதும் எல்லா மருந்துகளுமே நம் வயிற்றின் லைனிங் எனப்படும் உள்சுவர் பகுதியில்தான் உட்கிரகிக்கப்படும்.
சில மருந்துகள் வயிற்றின் லைனிங் பகுதியை எரிச்சலடையச் செய்யும். உதாரணத்துக்கு, தைலம் தடவும்போது அந்த இடத்தில் லேசான எரிச்சலை உணர்வோமில்லையா, அதுபோல வயிற்றுப் பகுதியில் சில மருந்துகள் எரிச்சலை ஏற்படுத்தும். அதைத்தான் வலியாக உணர்கிறார்கள்.
பொதுவாக வலி நிவாரணிகளுக்கு இதுபோன்ற பிரச்னை இருக்கலாம். அதேபோல தைராய்டு மருந்துகளுக்கு, வலிப்பு மருந்துகளுக்கு இத்தகைய குணம் இருப்பதால், அவற்றை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஒருவித எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பும் சில மருந்துகளை சாப்பாட்டுக்குப் பிறகும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவதன் பின்னணியிலும் காரணங்கள் உண்டு.
சில மருந்துகள் சாப்பாட்டுக்கு முன்புதான் உட்கிரகிக்கப்படும் திறன் கொண்டதாகவும், சில மருந்துகள் சாப்பிட்ட பிறகு உட்கிரகிக்கப்படும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இதைத் தவறவிட்டு மாற்றிச் சாப்பிடும்போது, அந்த மருந்து பலனளிக்காமல் போகலாம்.
அந்த வகையில் கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. எதை, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் எடுக்க வேண்டும்.
சர்க்கரைநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றை, உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். ஒரு வாய் உணவு சாப்பிட்டு, உடனே மாத்திரையை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு சாப்பிடச் சொல்வோம். அந்த வகையில் உணவுக்கும் மருந்துகளுக்கும் தொடர்புண்டு.

உங்களுக்கு ஏற்கெனவே அல்சர் மாதிரி வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருந்தால், அதை மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். மருத்துவர் அதற்கேற்ப மருந்துகளைப் பரிந்துரைப்பார். டிரக் இன்டர்ஆக்ஷன் எனப்படும் மருந்துகள் ஒன்றோடு ஒன்று வினையாற்றாதபடி துணை மருந்துகளையும் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.