ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
Doctor Vikatan: திட்டமிடாமல் உருவாகிவிட்ட கர்ப்பம்... அபார்ஷன் மாத்திரை பயன்படுத்தலாமா?
Doctor Vikatan: என் வயது 38. தாம்பத்திய உறவின்போது பெரும்பாலும் கவனமாகவே இருப்பேன். ஆனால், இந்த முறை ஏதோ அலட்சியத்தில், கரு தங்கிவிட்டது. ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால், இந்த வயதில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருவருக்கும் இல்லை. வெளியே சொல்லவும் கூச்சமாக இருக்கிறது. மெடிக்கல் ஷாப்பில் அபார்ஷன் மாத்திரை வாங்கிப் பயன்படுத்தினால், கரு கலைந்துவிடும் என்கிறாள் என் தோழி. அதைப் பயன்படுத்தலாமா... பக்க விளைவுகள் வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
கருக்கலைப்பு செய்வது என முடிவெடுத்துவிட்டால் முதலில் கணவன், மனைவி இருவருமாக மருத்துவரைச் சந்தித்துப் பேச வேண்டும். எந்தக் காரணத்துக்காக கருவைக் கலைக்க நினைக்கிறீர்கள் என்பதை மருத்துவரிடம் சொல்லி, அதிலுள்ள ரிஸ்க்குகளையும் அலசி ஆராய்ந்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப ஒருமித்த முடிவெடுங்கள். அப்படியில்லாமல் மெடிக்கல் ஷாப்புகளில் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அபார்ஷனுக்கான மாத்திரைகளை வாங்கி, வீட்டிலேயே பயன்படுத்துவது மிக ஆபத்தானது.
அபார்ஷன் செய்வதற்கு முன் கரு எத்தனை வாரங்கள் வளர்ச்சியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டியது மிக முக்கியம். கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களில் அபார்ஷன் செய்தால் ரிஸ்க் குறைவு. குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அபார்ஷன் செய்வதால் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். 7-8 மாதங்களில் செய்யப்படுகிற அபார்ஷன், கிட்டத்தட்ட பிரசவம் மாதிரியானது. ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பரிசோதனைகள் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகள் வைத்து டெலிவரி போன்றுதான் அதைச் செய்ய முடியும்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருவைக் கலைக்க நினைத்தால் தம்பதியர் இருவரும் சேர்ந்து மருத்துவரை அணுகி, பாதுகாப்பான முறையில் அபார்ஷன் செய்துகொள்வதுதான் சரியானது. இன்னன்ன காரணங்களுக்காக அபார்ஷன் செய்யலாம் என சில விதிகள் இருக்கின்றன. அதாவது 20 வாரங்களுக்குள்ளான கரு என்றால் அபார்ஷன் செய்துகொள்ளலாம், கரு வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் கலைக்கலாம் என்றெல்லாம் அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ கர்ப்பமாகிவிட்ட பெண்கள், அந்தக் கரு வேண்டாம் என நினைத்தால் முதல் 3 மாதங்களுக்குள் அபார்ஷன் செய்துகொள்வது பாதுகாப்பானது.
பெரும்பாலான மருந்துக் கடைகளில் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அபார்ஷன் மாத்திரைகளை விற்பதில்லை. அதையும் மீறி சிலர் சட்டத்துக்குப் புறம்பாக இந்த மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்த மாத்திரைகள் நிறைய பக்கவிளைவுகளைக் கொண்டவை. உதாரணத்துக்கு, பால் குடிக்கிற குழந்தை இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.

சுயமாக கருக்கலைப்பு மாத்திரை எடுக்கும்போது சிலருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து, கர்ப்பப்பையை சுத்தம் செய்ய வேண்டி வரலாம். எனவே, சிம்பிளாக முடிய வேண்டிய விஷயத்தை சிக்கலாகவும் சீரியஸாகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள். இன்னொரு முறை இப்படி நிகழாமல் இருக்க மருத்துவரிடம் கருத்தடை முறை குறித்துக் கலந்தாலோசியுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.