Doctor Vikatan: நடிகை தமன்னா சொல்லும் pimple treatment; எச்சில் தடவினால் பரு மறையுமா?
Doctor Vikatan: நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு பருக்கள் அதிகம் வரும் என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது வெளிப்படைத் தன்மை பாராட்டுக்குரியதே. ஆனால், பருக்களை விரட்ட அவர் சொன்ன சிகிச்சைதான் பயமுறுத்துகிறது. தூங்கி எழுந்ததும் காலையில், பல் துலக்குவதற்கு முன், உங்கள் வாயில் உள்ள எச்சிலைத் தொட்டு பருக்களின் மீது தடவினால், பருக்கள் உடனடியாக காய்ந்துவிடும் என்றும், தான் இதைத் தான் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எச்சில் என்பது அசுத்தமானதுதானே. அதை பருக்களின் மீது தடவுவது சரியானதா? தமன்னா போன்ற பிரபலங்கள் இப்படியெல்லாம் பேசினால், பொதுமக்கள் பலரும் அதை நம்பி பின்பற்ற ஆரம்பிக்க மாட்டார்களா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

ஒருவரது எச்சில் என்பது பருக்களை விரட்டுவதற்கு எந்த வகையிலும் பயன்படாது. நடிகை தமன்னா குறிப்பிட்டுள்ளது மிகமிக தவறான சிகிச்சை. எச்சில் என்பது சுத்தமான ஒன்றல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவரது எச்சிலில் ஏராளமான பாக்டீரியா இருக்கும். ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் சுகாதாரம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும். ஒருவரது வயது, அவர் என்ன சாப்பிட்டார், பற்களில் சொத்தை உள்ளிட்ட வேறு பிரச்னைகள் உள்ளனவா, வாய் சுகாதாரத்தைப் பேணுவதில் அந்த நபர் எப்படிப்பட்டவர் என பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். கிருமிகள் நிறைந்த எச்சிலை எடுத்து, இன்னொரு இன்ஃபெக்ஷனின் மேல் வைக்கும்போது, அது இன்னும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். எனவே, இந்தச் சிகிச்சை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
பருக்களின் மேல் இதுபோல எச்சில் தடவுவது, வினிகர் தடவுவது, டூத் பேஸ்ட் வைப்பது போன்ற விஷயங்கள், சருமத்தை மிக மோசமாக பாதிக்கும். தவிர, இதுபோன்ற சிகிச்சைகள், சருமத்தில் பிக்மென்ட்டேஷன் எனப்படும் கருமையை அதிகப்படுத்தி, அதை நிரந்தரமாக்கும் ரிஸ்க்கும் இருக்கிறது.

எனவே, ஒருவருக்கு பருக்கள் வந்தால், முதலில் அவை எத்தகைய தன்மை கொண்டவை என பார்க்க வேண்டும். அதாவது அடிக்கடி வருகின்றனவா, ஹார்மோன் மாறுதல் காரணமாக பீரியட்ஸ் நாள்களின் போது மட்டும் வருகின்றனவா, பருக்கள் மறையும்போது கரும்புள்ளிகளை, தழும்புகளை விட்டுச் செல்கின்றனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அதற்கேற்பவே பருக்களுக்கான சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும். சரும மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்ட க்ரீம் தடவுவது பருக்களையும் போக்கும், கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தாமல் காக்கும்.
எனவே, தயவுசெய்து பருக்கள், காயங்கள் என எதன் மீதும் எச்சில் தடவுவதைத் தவிருங்கள். பிரபலங்கள் சொல்வதை அப்படியே நம்பி பின்பற்றக்கூடாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.