வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி
``இது லாக்கப் மரணம் இல்லை'' நேற்று இரவு நடந்தது என்ன? - கோவை காவல் ஆணையர் விளக்கம்
சிவகங்கை காவல் கஸ்டடியில் இருந்த அஜித்குமாரை, காவல்துறையினர் கடுமையாக தாக்கியத்தில் உயிரிழந்தார். இதேபோல கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி ஓய்வதற்குள், கோவை மாவட்டத்தில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை பேரூர், ராம செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (60). இவர் கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கத்தில், “காவலர் செந்தில்குமார் என்பவர் பணியில் இருந்தபோது, நேற்று இரவு ஒரு நபர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். செந்திலிடம் பேசியவர், பிறகு அவருக்கு தெரியாமல் மாடியில் உள்ள அறைக்கு சென்று தற்கொலை செய்துள்ளார். காலையில் பணிக்கு காவலர்கள், அறைக்குள் சென்றபோதுதான், அவர் வேஷ்டியில் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதியும் விசாரணை நடத்த உள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த நபர் இரவு 11.04 மணி அளவு பேருந்தில் இருந்து இறங்கி, டவுன்ஹால் புறநகர் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு 10 நிமிடங்கள் இருந்தவர், 11.16 மணிக்கு போத்தீஸ் கார்னர் பகுதியில் ஓடுகிறார். 11.19 மணிக்கு பெரியகடை வீதி காவல்நிலையம் வந்துள்ளார். தன்னை யாரோ வெட்டுவதற்காக துரத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் காவல்துறையினர் அவரை வெளியில் அனுப்பி காலை வந்து புகார் அளிக்க சொல்லியிருக்கிறார்கள்.

அவர் சிறிது நேரத்தில் காவலருக்கு தெரியாமல், மேலே இருந்த உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தன் வேட்டி மூலம் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காலை பணிக்கு வந்தவர்கள் அறையை திறந்தபோதுதான் தற்கொலை செய்த தகவல் தெரியவந்தது.
உயிரிழந்த ராஜன் சென்டரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. தன் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தன்னை யாரோ கொல்ல வருவதுபோல் உள்ளது என்று தன் மூத்த சகோதரியிடம் கூறியுள்ளார். இது லாக்அப் மரணம் இல்லை. காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை தான்.

முதல்கட்ட விசாரணையில் அந்த நபர் கடந்த 10 நாள்களாகவே மிகுந்த மன அழுத்ததில் இருந்தார் என்கிற குடும்பத்தினரிடம் தெரிய வந்தது. பணியில் அலட்சியமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.” என்றார்.
ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ராஜன் சாலையில் ஓடுவது மற்றும் காவல்நிலையத்திற்குள் வந்து, மேல் அறைக்கு செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தடய அறிவியல் துறை நிபுணர்கள், புகைப்பட நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.