வழக்கறிஞர் கொலை வழக்கு; 90 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - நடந்தது என்ன?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும், முருகானந்தத்தின் தந்தையான லிங்கசாமிக்கும் சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1999-ஆம் ஆண்டு காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த லிங்கசாமி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தண்டபாணி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில்,போதிய சாட்சிகள் இல்லை எனக் கூறி, தண்டபாணியை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தாராபுரம் மத்தியப் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தண்டபாணிக்குச் சொந்தமான தனியார் பள்ளிக் கட்டடம், பள்ளிக் கல்வித் துறை அனுமதித்த அளவைவிட 4 மாடிகளில் கட்டப்பட்டு செயல்படுவதாகவும், இதனால் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என முருகானந்தம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில் தண்டபாணி அனுமதியின்றி கட்டியிருந்த கூடுதல் 4 மாடிக் கட்டடம் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சொத்து தொடர்பாக தண்டபாணி மீது முருகானந்தம் மீண்டுமொறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதுதொடர்பான நில அளவீடு பணிகளை 28-7-2025 அன்று பார்க்கச் சென்ற முருகானந்தத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை தொடர்பாக தாராபுரம் காவல் நிலையத்தில் தண்டபாணி, அவரது உறவினர் நாட்டுத்துரை, கூலிப்படையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, நாகராஜன்,சுந்தரன், ராம் ஆகியோர் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களைக் கைது செய்யும் வரை முருகானந்தத்தின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் முருகானந்தத்தின் கொலை வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் முருகானந்தம் கொலை தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் புலன் விசாரணை செய்து 90 நாள்களுக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை மேற்கு மண்டலத் தலைவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் முருகானந்தத்தின் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.