வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!
வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த 2024 ஜூலையில் அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரது ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முஹம்மது யூனஸ் தலைமையில், அந்நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஜூலை புரட்சி என்றழைக்கப்படும் இந்தப் போராட்டங்கள் வெற்றிப் பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொலைக்காட்சி மூலம் இடைக்காலத் தலைவர் யூனுஸ் நாட்டு மக்களிடம் உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“தேசியளவிலான பொது தேர்தலை அடுத்த ரமலானுக்கு முன்னதாக, 2026-ம் ஆண்டில் பிப்ரவரியில் நடத்துமாறு, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, இடைக்கால அரசின் சார்பாக நான் கடிதம் எழுதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வங்கதேசத்தின் பொது தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரமலான் பிப்ரவரி 17 அன்று துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு பொது தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு