ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக...
Doctor Vikatan: பருப்பில்லாமல் சாப்பிட மறுக்கும் குழந்தை; வாய்வுத்தொந்தரவுக்குத் தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் பேத்திக்கு வயது 4. பருப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட மாட்டாள். இதனால் அவளுக்கு வாய்வுத் தொந்தரவு ஏற்பட்டு அடிக்கடி வயிறு பிரச்னை செய்கிறது. உணவு உண்டவுடன் கழிவறைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. உணவும் முழுமையாக ஜீரணம் ஆகாமல் வெளியேறுகிறது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
- padmavathi, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
பருப்பு என்பது ஊட்டம் நிறைந்த ஓர் உணவு என்பதில் சந்தேகமில்லை. அதில் புரதச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து, தாதுச்சத்து என எல்லாம் உள்ளன. பருப்பு நல்ல உணவு என்றாலும் அது மட்டுமே உணவில் பிரதானமாக இருக்கக்கூடாது. உணவில் அதுவும் ஒரு பகுதியாக இருக்கலாம். அதாவது பேலன்ஸ்டு டயட் தான் சரியானது என அறிவுறுத்துகிறோம். அப்படிப் பார்த்தால், ஒருவரது உணவில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்காக காய்கறி, பழங்கள், புரதச்சத்துக்காக பருப்பு உள்ளிட்டவை என எல்லாம் இருக்க வேண்டும்.
அளவுக்கதிகமாக பருப்பு உணவுகள் சாப்பிடும்போது அவற்றில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தின் காரணமாக வயிற்று உப்புசம், வாய்வு பிரச்னை போன்றவை வரலாம். சமைக்கும் முறையிலும் கவனம் இருக்க வேண்டும். அதாவது அந்த உணவுகள் நன்றாக செரிமானமாகும்படி சமைக்க வேண்டும். அதே போல சாப்பிடும் அளவும் முக்கியம். ஏற்கெனவே சொன்னது போல, பருப்பு என்பது உணவில் ஒரு பகுதியாக இருக்கட்டும். அதுவே பிரதான உணவாக இருக்க வேண்டாம்.
சாப்பிட்டதும் மலம் கழிக்கிறாள் என்றால், அவளுக்கு செரிமானத்தில் பிரச்னை இருக்கலாம் அல்லது சாப்பிட்ட உணவு சரியாக உட்கிரகிக்கப்படவில்லை என்று அர்த்தம். எனவே, உணவில் செரிமானத்துக்கு உதவும் ப்ரீபயாட்டிக், புரோபயாட்டிக் உணவுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகள், பழங்கள் என எல்லாம் சேர்த்த பேலன்ஸ்டு உணவு எடுத்துக்கொண்டாலே, குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா எண்ணிக்கை அதிகமாகும். புரோபயாட்டிக் உணவாக குழந்தையின் உணவில் தயிர் சேர்த்துக் கொடுக்கலாம். ப்ரீபயாட்டிக் உணவாக இஞ்சி, பூண்டு, சிறுதானியங்கள், கீரை போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.
இட்லியுடன் பருப்பு சேர்த்த சாம்பார் மிகச் சிறந்த காம்பினேஷன். இட்லி என்பது நொதிக்கப்பட்ட உணவு என்பதால் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அத்துடன் பருப்பும் சேரும்போது அது கூடுதல் ஆரோக்கியமானதாக மாறும். உங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு ஊட்டம் கிடைக்கிறது என்ற நிலையில், ஒரு நாளைக்கு 30 முதல் 40 கிராம் அளவு பருப்பு போதுமானது. தற்சமயம், குழந்தைக்கு செரிமான பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால், குடல்நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.